Published : 20 Feb 2018 09:04 AM
Last Updated : 20 Feb 2018 09:04 AM

கிரிக் இன்போ விருதுகள் அறிவிப்பு: சாஹல், குல்தீப் சாதனைகளுக்கு அங்கீகாரம்

2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதை கிரிக் இன்போ இணையதளம் அறிவித்துள்ளது. இதில் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் விருதை தட்டிச் சென்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் சிறப்பாக பேட் செய்த இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித்தும் விருதை கைப்பற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித் கவுர் 171 ரன்கள் விளாசியிருந்தார். இது மகளிர் பிரிவில் சிறந்த பேட்டிங் விருதை பெற்றுள்ளது. ஆடவர் பிரிவில் சிறந்த டி 20 பந்து வீச்சாளராக இந்தியாவின் யுவேந்திரா சாஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் அவர், 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக தேர்வாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறந்த அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் தற்போது முக்கிய அங்கமாக திகழும் குல்தீப் யாதவ் 2017-ம் ஆண்டில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒட்டுமொத்தமாக 43 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக இங்கிலாந்தின் ஹீதர் நைட் தேர்வாகி உள்ளார். இவரது தலைமையில் கடந்த ஆண்டில் இங்கிலாந்து அணி 12 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் உலகக் கோப்பை பட்டமும் அடங்கும்.

இதேபோல் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அன்யா ஷப்போல், சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர், இந்திய அணிக்கு எதிராக 46 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ஆடவர் பிரிவில் சிறந்த டெஸ்ட் பேட்டிங்குக்கான விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார். புனேவில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஸ்மித் சேர்த்த 109 ரன்கள் சிறந்த பேட்டிங்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு விருதை ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த நாதன் லயன் தட்டிச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் நாதன் லயன் 50 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்கள் வேட்டையாடியிருந்தார். இது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாக தேர்வாகி உள்ளது. சிறந்த டி 20 பேட்டிங்குக்கான விருது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் எவின் லீவிஸ் வசமானது. கடந்த ஆண்டு கிங்ஸ்டனில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் எவின் லீவிஸ் 125 ரன்கள் விளாசி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருந்தார்.

சிறந்த ஒருநாள் போட்டி பந்து வீச்சு விருதுக்கு பாகிஸ்தானின் முகமது அமீரும், பேட்டிங் விருதுக்கு அதே அணியைச் சேர்ந்த பஹர் ஸமானும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x