Published : 19 Feb 2018 08:30 PM
Last Updated : 19 Feb 2018 08:30 PM

வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம்

 

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார்.

அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எடை குறைவாக இருக்கிறது. அணிவதற்கு எளிதாகவும், சொகுசாகவும் இருக்கும். ஓடுவதற்கு சிறப்பானதாக இருக்கும், நான் அணிய தயாராகிவிட்டேன்'' எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கிப்ஸ் ட்விட் செய்தார். அதில், ''நம்புகிறேன், அஸ்வின் இனிமேல் நீங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுவீர்கள் ஏனென்றால் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவீட்டீர்கள். இனிமேல் உடல் தகுதியில்லாமல் இருக்கப் போவதில்லை.'' என கிரிக்கெட் சூதாட்டத்தை உள் அர்த்தமாகக் கூறி பதில் அளித்து இருந்தார்.

அதாவது புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டார் அஸ்வின், அந்த நிறுவனத்துக்காக இனி அதிகமாக விளையாடுவார், விக்கெட்டுகள் எடுப்பார், ரன்கள் சேர்ப்பார், அதிக முயற்சிகள் எடுப்பார் என்று மறைமுகமாகக்  கூறி இருந்தார்.

இதற்கு அஸ்வின் தனது வார்த்தைகளில் கடுமையான காட்டத்தை காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மிகுந்த காட்டத்துடன் ட்விட்டரில் பதில் அளித்திருந்தார்.

அதில், ''நீங்கள் வேகமாக ஓடிய அளவுக்கு என்னால் வேகமாக ஓட முடியாது. துரதிர்ஷ்டவசமாக உங்களைப் போல் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் இல்லை. ஆனால், மிக அருமையான நேர்மையான, நியாயமான சிந்தனை கொண்ட மனிதராக ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தப் போட்டியிலும் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் செய்து, அதில் வந்த பணத்தை வைத்து நான் சாப்பிடவில்லை.

எனக்கு எது உணர்வுப்பூர்வமாக இருக்குமோ அது சிலருக்கு அப்படி இருப்பதில்லை. உங்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருப்பது எனக்கு இருப்பதில்லை. நான் எனது ரசிகர்களையும், குடும்பதத்தாரையும் மதிக்கிறேன். இத்துடன் ட்வீட்டையும் முடிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது, நடந்த போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கேப்டன் குரோனியே, கிப்ஸ், நிக்கி போயே, ஸ்டிரைடம் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய கிங் கமிஷன் குரோனியேவுக்கு வாழ்நாள் தடை விதித்தது, கிப்ஸ் தான் செய்த தவறுக்கு குரோனியேதான் காரணம் எனக் கூறியதையடுத்து, அவருக்கு அபராதமும் , 6 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி சாம்பியன் கோப்பையில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் கிப்ஸ் சேர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என அஞ்சினார். இருப்பினும் இந்தியா வந்து போலீஸாரிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x