Published : 19 Feb 2018 08:05 AM
Last Updated : 19 Feb 2018 08:05 AM

முத்தரப்பு டி 20 தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூஸிலாந்து

முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், டேவிட் மலான் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 3, டிம் சவுத்தி 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மார்ட்டின் கப்தில் 62, காலின் மன்றோ 57 ரன்கள் விளாசினர். வில்லியம்சன் 8, ராஸ் டெய்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து அணியால் 9 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. சாப்மேன் 37, காலின் டி கிராண்ட்ஹோம் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ரன்ரேட்

இந்த ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது.

இதில் நியூஸிலாந்துக்கு எதிராக 12 ரன்களில் வீழ்ந்த ஆட்டமும் அடங்கும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போதும் ரன்ரேட் (-1.036)குறைவாக இருந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்து அணி -0.556 ரன்ரேட்டுடன் இறுதிப் போட்டியில் கால்பதித்தது. 21-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x