Published : 16 Feb 2018 09:33 PM
Last Updated : 16 Feb 2018 09:33 PM

ஷர்துல் தாக்கூர் 4விக்.: மீண்டும் கட்டுகோப்பான பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சொதப்பல்!

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் 6வது, இறுதி ஒருநாள் போட்டியில் கோலியினால் முதலில் களமிறங்கச் செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணியினரின் பேட்டிங்கில் தன்னம்பிக்கை இல்லை. பேட்ஸ்மென்களின் பார்மும் கவலையளிப்பதாக உள்ளது, இதனால் பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் கூட படுமோசமாக பேட்டிங் செய்வதைப் பார்த்து வருகிறோம்.

அதற்காக இந்தியப் பந்து வீச்சை குறை கூறுவதற்கில்லை, அவர்களுடைய பலவீனத்தை தங்களது கட்டுக்கோப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய பந்து வீச்சாளர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டனர். புவனேஷ்வர் குமாருக்குப் பதில் சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், சவாலான பேட்டிங் இல்லாததால் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மார்க்ரம், ஆம்லா தொடக்க ஜோடி ஆரம்பத்தில் பிட்சின் மந்தத் தன்மையினால் ஆடிய ஸ்ட்ரோக்குகள் சிலது மட்டையின் உள்/வெளி விளிம்புகளில் பட்டுச் சென்றன. முதல் ஓவரில் மார்க்ரம் இரண்டு அடிக்க வேண்டிய பந்துகளை முறையாக ஆஃப் திசையில் ஷர்துல் தாக்கூரை பவுண்டரிக்கு அனுப்பினார். ஹஷிம் ஆம்லா தடுமாறினார். 3-வது ஓவரில் தாக்கூர் பந்தை தூக்கி அடிக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆம்லா முதல் பவுண்டரியை அடித்தார். பும்ரா மார்க்ரமுக்கு ஒரு அபாரமான மெய்டன் ஓவரை வீசினார்.

தாக்கூர் பந்து ஒன்றை மார்க்ரம் ‘பிளிக்’ செய்ய சாஹல் கேட்சுக்காக எம்பினார் ஆனால் பந்து பவுண்டரி ஆனது, பும்ரா பந்தில் ஆம்லா பிளிக் ஆட முயல முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கோலி முன்னால் விழுந்தது.

கடைசியில் 10 ரன்கள் இருந்த போது ஆம்லா தாக்கூரின் லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்திற்குத் தாமதமாக வினையாற்றி புல் ஷாட் ஆட முயன்றார் பந்து கிளவ்வில் பட்டு தோனியிடம் தஞ்சமடைந்தது. உண்மையில் பார்மில் உள்ள ஒரு பேட்ஸ்மெனுக்கு இது சிக்ஸ் பந்தாகும். நிச்சயம் அவுட் ஆகும் பந்தல்ல, ஆடாமல் விட்டிருக்கலாம்!

மார்க்ரம் சில நல்ல ஷாட்களை அனாயசமாக அடித்தார் இதில் ஒரு ஸ்கொயர்லெக் சிக்சும் உண்டு. ஆனால் 10வது ஓவரில் தாக்கூரை சிக்ஸ் அடித்த அதே ஓவரில் 3 ஃபுல் லெந்த் அல்லது ஓவர்பிட்ச் பவுண்டரி பந்துகளை ஆஃப் திசையில் பீல்டர் கையில் அடித்து வெறுப்படைந்தார். வெறுப்படைந்ததை உணர்ந்த தாக்கூர் வேகம் குறைந்த பந்து ஒன்றை வீச மார்க்ரம் ஷாட் சரியாக சிக்காமல் ஷ்ரேயஸ் ஐயரின் அபாரமான கேட்ச் ஆனது. 24 பந்துகளில் மார்க்ரம் வெளியேறினார். மீண்டும் கவர் திசையில் அவுட்.

ஸோண்டோ, டிவில்லியர்ஸ் சிறு கூட்டணி:

தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் கொஞ்சம் வேகம் பளிச்சிட்டது, ஸோண்டோ, டிவில்லியர்ஸ் பேட் செய்த போதுதான், இவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சாஹல், குல்தீப் யாதவ்வை அடித்து ஆடினர். 18வது ஓவரில் குல்தீப் யாதவ்வை டிவில்லியர்ஸ் 3 பவுண்டரிகள் அடித்தார், இதில் ஒன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு அதிர்ஷ்ட பவுண்டரி ஆனது. ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்பும் உண்டு. சாஹல் வீசிய இரண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளை ஸோண்டோ மிட்விக்கெட்டில் ரசிகர்கள் மத்தியில் அரக்க சிக்ஸ் அடித்தார். இருவரும் சேர்ந்து 65 பந்துகளில் 62 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த டிவில்லியர்ஸ் சாஹலின் நேரான பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தது தொய்வை ஏற்படுத்த சோண்டோ மற்றும் கிளாசன் எச்சரிக்கை என்ற பெயரில் ரன் எடுப்பதை குறைத்தனர் இருவரும் சேர்ந்து 58 பந்துகளில் 30 ரன்களையே சேர்த்தனர். பிறகு கிளாசன் 22 ரன்களில் பும்ராவின் பந்தை ஷார்ட் கவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பெஹார்டீன் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேற, ஸோண்டோ 54 ரன்களில் ஸ்வீப்பர் கவரில் சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிறகு மோர்னெ மோர்கெல், பெலுக்வயோ 36 ரன்கள் ஜனரஞ்சக கூட்டணி அமைத்தனர். மோர்கெல் ஒரு சிக்ஸ் அடித்தார் பிறகு கட் ஷாட்டை நேராக கவரில் கேட்ச் கொடுத்தார், இம்ரான் தாஹிர், பெலுக்வயோ வேகம் குறைந்த பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினர்.

பெலுக்வயோவை தாக்கூர் 2 சிக்சர்கள் அடித்தார். இது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. கடைசி விக்கெட்டாக பெலுக்வயோ ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 204 ரன்களுக்குச் சுருண்டது. குல்தீப், சாஹல் 20 ஒவர்களில் 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா 10 ஒவர்களில் 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பும்ரா 2 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்டுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x