Last Updated : 16 Feb, 2018 10:56 AM

 

Published : 16 Feb 2018 10:56 AM
Last Updated : 16 Feb 2018 10:56 AM

தோனி கேப்டன் ஆன போது ஏற்கெனவே அணி நிலைபெற்றிருந்தது, மாற்றம் கொண்டு வந்தவர் கோலி: யுவராஜ் சிங் பேட்டி

கிரிக்கெட் வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள், புற்று நோய் தாக்குதல் என்று நிறைய போராட்டங்களைச் சந்தித்து வென்றுள்ள வீரர் யுவராஜ் சிங். இப்போது கூட வயது ஒரு காரணியல்ல, ஆட்டத்திறன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தன் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் கேப்டன்கள் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் தோனி கேப்டனாகும் போது அணியில் மேட்ச் வின்னர்கள், அனுபவ வீரர்கள் என்று அணி நிலைபெற்றிருந்தது, ஆனால் கோலி கேப்டனாகும் போது அப்படியல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில் வருமாறு:

விராட் கோலி, தோனியைக் காட்டிலும் வித்தியாசமானவர், தோனி அமைதியானவர் ஓர்மை குலையாதவர். விராட் கொஞ்சம் கூடுதல் ஆக்ரோஷமுடையவர். கேப்டனாக அவர் பெறும் வெற்றி முடிவுகளே இதனை எடுத்துரைக்கிறது.

இது வேறு ஒரு தலைமுறை என்பதையும் மறுக்க முடியாது. தோனி கேப்டன் ஆனபோது அவருக்கு அனுபவ வீரர்கள், மேட்ச் வின்னர்கள் இருந்தனர், ஒரு செட் ஆன அணி தோனிக்கு வரும்போதே இருந்தது.

ஆனால் விராட் கோலியின் கீழ் அணி உருமாற்றம் அடைந்துள்ளது. அவரே உடல்தகுதியில் சிறந்து விளங்குபவர், கண்டிப்பானவர் என்பதால் அணி வீரர்களிடத்திலும் அதனை எதிர்பார்க்கிறார்.

முந்தைய தலைமுறையினரை விட தற்போது வீரர்கள் உடல்தகுதியளவில் சிறப்பாகவே விளங்குகின்றனர். ஆட்டமும் இதனை வலியுறுத்துகிறது.

விராட் கோலியும் தனது உடற்தகுதி, உணவுப்பழக்க வழக்க ஒழுக்கம் ஆகியவற்றுடன் அணியை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார். 2019 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவர் சரியான திசையில் செல்வதாகவே நினைக்கிறேன்.

ஓர் அணித்தலைவர் அணி எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்தத் திசையில் செல்லும், விராட் கோலி தலைமையில் இது முற்றிலும் வித்தியாசமானது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. ஆட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அணி சென்று கொண்டிருக்கிறது.

கேப்டனின் ஆளுமை என்பது, அணி ஆட்டத்தை எப்படி அணுகுகிறது என்பதில் பிரதிபலிக்கவே செய்யும்.

இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x