Last Updated : 30 Jan, 2018 04:36 PM

 

Published : 30 Jan 2018 04:36 PM
Last Updated : 30 Jan 2018 04:36 PM

செக்யூரிட்டியாக வேலை செய்து ஐபிஎல் அணியில் இடம் பிடித்த வீரர்

 

தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி(இரவுநேர காவல்) வேலை செய்து கொண்டே கிரிக்கெட் விளையாடி, ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் தார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பர்வேஸ் ரசூலுக்கு பின், தேர்வு செய்யப்பட்ட 2-வது வீரர் மன்சூர் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு மன்சூர் தார் வாங்கப்பட்டுள்ளார். மாநில அணியில் இடம் பெற்று இவர் அடித்த 100 மீட்டர் சிக்கர்தான் ஐபிஎல் அணிகளுக்கு அறியச் செய்தது.

காஷ்மீரின் வடபகுதயில் உள்ள பந்திப்பூர் மாவட்டம் சோனாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்சூர் அகமது தார். இவரின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டியாக (இரவு பாதுகாவல்) பணிபுரிந்துள்ளார். அப்போது கிடைக்கும் கால நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து மாநில அணியில் இடம் பிடித்துள்ளார். காஷ்மீர் மாநில அணியில் இடம் பிடித்தபின் இவர் போட்டிகளில் அடிக்கும் சிக்சர்களே இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்துள்ளன.

இது குறித்து மன்சூர் தார் நிருபர்களிடம் கூறியதாவது-

''கிங்ஸ்லெவன் அணிக்காக என்னை வாங்கிய பிரீத்தி ஜிந்தாவுக்கும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தது, இப்போதுதான் ஒரு அணிக்கு சென்றுள்ளேன். முறையான வேலை கிடைக்காமல் வீட்டின் வறுமைச் சூழலால் தினக்கூலியாக 60 ரூபாய்க்கு வேலை செய்து இருக்கிறேன்.

இன்றைய கிரிக்கெட் உலகில் ரூ.20 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை இல்லை என்கிறபோதிலும், எனக்கு மிகப்பெரிய தொகையாகும். என் வீட்டில் இன்னும் முறையாக ஜன்னல், கதவுகள் இல்லை. அதை முதலில் சரிசெய்வேன், உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் எனது தாய்க்கு சிகிச்சை அளிப்பேன்.

என்னை ஐபிஎல் அணிக்கு தேர்வு செய்தது என் கிராமத்துக்கு மட்டுமல்ல , மாநிலத்துக்கே பெருமையானதாகும். இந்த செய்தியை என் தாயிடம் கூறியவுடன் ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் என்னுடைய வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீதான ஆசையால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் இரவு நேர காவலராக பணியாற்றி பகலில் கிரிக்கெட் விளையாடுவேன். உள்ளூர் கிளப் அணிக்காக நான் முதல் ஆட்டத்தில் பங்கேற்கும் போது, காலில் அணிவதற்கு நல்ல ஷூ கூட என்னிடம் இல்லை.

2011-ம் ஆண்டு மாநில அணிக்கு தேர்வானபின்தான் என்னுடைய வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. சமீபத்தில் டெல்லியில் நடந்த டி20 போட்டியில் யுவராஜ் சிங்க்கு எதிரான அணியில் விளையாடினேன். இப்போது நானும், அவரும் ஒரே அணிக்காக விளையாடப்போகிறோம்''

இவ்வாறு மன்சூர் தார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x