Published : 29 Jan 2018 03:38 PM
Last Updated : 29 Jan 2018 03:38 PM

ஐபிஎல் ஏலத்தில் திட்டப்படி செயல்பட்டோம்: மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பேட்டி!

இரண்டு நாள் ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, தங்கள் அணி திட்டமிட்டபடியே ஏலத்தில் செயல்பட்டது என்று கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு...

உங்கள் அணியை பொருத்தவரை இந்த ஏலம் எப்படி இருந்தது?

எங்களிடம் திட்டமிருந்தது. சற்று ஆபத்தானதுதான். ஆனால் நாங்கள் அதன்படி சரியாக செயல்பட்டோம் என்றே நினைக்கிறேன். ஆரம்பத்தில் பரபரப்பு அதிகமாக இருந்தது. நிறைய பேர் ஒவ்வொரு வீரருக்கும் ஏலம் கேட்க ஆரம்பித்தார்கள். எங்களிடம் அந்த அளவு பணம் இல்லை என்பதால் நாங்கள் பின்வாங்கிவிட்டோம். கண்டிப்பாக க்ருணால் பாண்டியாவை ரைட் டு மேட்ச் கார்ட் மூலம் எடுப்போம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவர்  10வது கட்டத்தில் தான் ஏலத்தில் வந்தார். அதனால் அதற்கான பணத்தை வைத்திருக்க வேண்டியிருந்தது.

 

அந்த ஆபத்தான திட்டத்தைப் பற்றி சொல்லுங்கள்?

எந்த இரண்டு வீரருக்கு ரைட் டு மேட்ச் உபயோகிக்கப் போகிறோம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். எங்கள் அணி வீரர்கள் பலரை மற்ற அணியினர் வாங்கினார்கள். அதனால் மாற்று வீரர்களை பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிந்திருந்தது. ஒட்டுமொத்தமாக எங்கள் திட்டம் பலித்தது என்றே நினைக்கிறேன். ஒரு சில வீரர்களை தவறவிட்டோம். ஆனால் ஏலத்தில் அதை தவிர்க்க முடியாது.

 

நீங்கள் க்ருணாள் பாண்டியாவை ரைட் டு மேட்ச் மூலம் எடுக்கப் போகிறீர்கள் என்பதால் மற்ற அணியினர் விலையை ஏற்றி விட்டார்களா?

இல்லை. எங்கள் அணிக்கு அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலமாக அவர் ஆற்றியிருந்த பங்கின் மூலம் அவருக்கான மதிப்பு கூடியிருந்தது. அவர் எங்கள் அணியின் இரண்டு பொறுப்புகளை கவனிப்பதால் அவரை வாங்க நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். ஹர்திக்கும் இதே அணியில் இருப்பதால் இருவரும் இணைந்து நன்றாக ஆடுவார்கள்.

 

விக்கெட் கீப்பரை பொருத்த வரையில் சந்தேகங்கள் இருந்ததா?

இஷானை எடுக்க வேண்டும் என்றே நினைத்திருந்தோம். ஏனென்றால் பயிற்சியிலும் அவர் நன்றாக ஆடுவதைப் பார்த்தோம். ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் எங்கள் திட்டங்களுக்குள் சரியாக பொருந்திப் போவார். ஜோஸ் பட்லர் விலை அதிகம் என்பதால் அவரை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது. மேலும் அடுத்த சீஸனில் அவரால் ஆட முடியாது. அவரை எடுக்க முடியாத போது இஷானை எடுத்தோம். மும்பை இந்தியன்ஸில் எப்போதும் இளம் திறமைகளை ஆதரிப்போம். ஹர்திக், பும்ரா, க்ருணால் என மூன்று முக்கிய திறமைகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

 

ஏலத்துக்கு முன்னும், ஏலம் நடக்கும் போதும் ரோஹித் சர்மாவுடன் பேசினீர்களா?

ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட் போட்டிக்கு முன் அவருடன் பேசினோம். ஏனென்றால் அதற்குப் பிறகு அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கைக்கு பயணப்பட்டபோது ரோஹித்தை இலங்கையில் சந்தித்தேன். ஏலத்தில் நாங்கள் எடுத்த வீரர்களை பொருத்தவரை ஒரு குழுவாக அனைவருக்கும் மகிழ்ச்சியே.

 

எந்த முக்கிய வீரரை தவறவிட்டதாக நினைக்கிறீர்கள்? எந்த முக்கிய வீரர் குறைந்த விலைக்கு எடுக்கப்பட்டார்?

அப்படி யாரையும் தவற விட்டதாக நினைக்கவில்லை. எங்களைப் பொருத்தவரை கெய்ரன் பொலார்ட், எவின் லூயிஸ், பென் கட்டிங் ஆகியோரை நல்ல (குறைந்த) விலைக்கு எடுத்தோம் என நினைக்கிறேன். மேலும் சனிக்கிழமை முஸ்தஃபிஸூர் மற்றும் பாட் கம்மின்ஸை எடுத்ததும் நல்ல விலை தான். சஞ்சு சாம்சன், கே எல் ராகுலை தவறவிட்டத்தில் சற்று ஏமாற்றமே. ஆனால் அவர்களை எடுப்பது கடினம் என்பதை அறிந்திருந்தேன்.

 

உள்ளூர் வீரர்களில் நீங்கள் நினைத்த எத்தனை பேரை எடுக்க முடிந்தது?

இஷான் கண்டிப்பாக எங்கள் பார்வையில் இருந்தார். ராஹுல் சந்தர், மயங்க் என்ற இரண்டு லெக் ஸ்பின்னர்கள் திறமை எங்கள் திருப்திகரமாக இருந்தது. அவர்கள் இருவரையுமே எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது அற்புதமாக நடந்தது. வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்தவரை பிரதீப் பயிற்சியில் நன்றாக வீசினார். அனுபவமும் இருந்தது. அவரை எடுக்க பரிசீலித்தோம்.  இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளார்களை தேர்ந்தெடுத்தோம். மொஹ்ஸின் கான் மற்றூம் நிதீஷ். முன்னமே வீரர்களுக்கான சோதனை வலை பயிற்சி நடத்தியதால் வீரர்களின் ஆட்டமும், எண்ன ஓட்டமும் எப்படி இருக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இதை முன்னாடியே செய்திருக்கிறோம். இதற்கு முன்னால் அப்படித்தான் ஹர்திக் மற்றும் பும்ராவை நாங்கள் தேர்ந்தெடுத்தது.

- ©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x