Published : 29 Jan 2018 01:18 PM
Last Updated : 29 Jan 2018 01:18 PM

நான் மகிழ்ச்சியில் பறந்தேன்: ரூ.11.5 கோடி ஐபிஎல் வீரர் ஜெய்தேவ் உனாட்கட் நெகிழ்ச்சி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் ஐபிஎல் 2018 ஏலத்தில் ரூ.11.5 கோடிக்கு, அதாவது சுமார் 1.8 மில். அமெரிக்க டாலர்களுக்கு, ஏலம் எடுக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் தான் மகிழ்ச்சியில் பறப்பதாக நெகிழ்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோரை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்க ரூ.11.5 கோடிக்கு அதிக செலவான இந்திய வீரரானார் ஜெய்தேவ் உனாட்கட்.

விஜய் ஹசாரே டிராபிக்காக ராஜ்கோட்டில் பயிற்சிக்காக உனாட்கட் செல்ல வேண்டியிருந்தது. உனாட்கட் தன் மனநிலை பற்றி ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டதாவது

“ஏலத்தில் என் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் சேர்ந்தே போனில் ஏலத்தைப் பார்த்தோம். வலைப்பயிற்சியை 5 நிமிடங்களுக்கு நிறுத்தி விட்டோம். சக வீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆரவாரம் செய்தபடி இருந்தனர், எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர், தங்களுக்குள்ளேயே வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நமக்காக உண்மையில் மகிழ்ச்சியடைபவர்களை பார்ப்பது உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. விருந்து கொடுக்காமல் என்னை விடமாட்டேன் என்றார்கள், பிறகு விருந்தை தள்ளி வைத்தோம். விஜய் ஹசாரே டிராபிக்காக ஹைதராபாத் வரும் போது விருந்தில் மகிழ்வோம்.

உள்ளபடியே கூற வேண்டுமானா இந்தத் தருணத்துடன் நானும் நீந்திக் கொண்டிருந்தேன். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே எனக்குப்புரியவில்லை.

ஏலத்தினால் எனக்கு கவனச் சிதறல் ஏற்படவில்லை, ஏலம் முடிந்தவுடன் வலைக்குத் திரும்பினேன். உண்மையில் நான் மகிழ்ச்சியில் பறக்கவே செய்தேன். பறத்தலிலிருந்து தரையிறங்க முயற்சி செய்தேன். நான் எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை. பயிற்சி முடிந்து போனை எடுக்க ஆரம்பித்தேன் இன்னும் அழைப்புகள் ஓயவில்லை.

என் சகோதரி குடும்பம் மகிழ்ச்சியில் துள்ள, என் பெற்றோர் பதற்றத்துடன் இருந்தனர், இவ்வளவு தொகை கொடுத்து எடுக்கிறார்கள் என்றால் அதன் மீதான் எதிர்பார்ப்புகள், அழுத்தங்கள் பற்றி அவர்கள் கவலையடைந்திருக்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் நன்றாக ஆடியதாக உணர்கிறேன். இலங்கைக்கு எதிராகவும் ஒரு மாதம் முன்பு நன்றாக வீசினேன்.

இது அனைத்தும் என்னுடைய வேர்களுக்கு என்னை திருப்பியுள்ளது, என் அம்மா எப்போதும் கூறுவார், சாதாரணமாக இரு, இயல்பாக இரு, இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று திரும்பத் திரும்பக் கூறுவார், இந்த அறிவுரை என்னுடனேயே இருப்பது” இவ்வாறு கூறினார் ஜெய்தேவ் உனாட்கட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x