Last Updated : 27 Jan, 2018 09:01 PM

 

Published : 27 Jan 2018 09:01 PM
Last Updated : 27 Jan 2018 09:01 PM

ஒரு நேரத்தில் செம கிராக்கி… இன்று சீண்டவில்லை: விலைபோகாத கெயில், ஜோய் ரூட், மலிங்கா

2018-ம் ஆண்டு 11-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடருக்காக பெங்களூருவில் இன்று நடந்த வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில், இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோரை விலை கொடுத்து எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

அதே நேரத்தில் டி20 போட்டியில் 6பந்துகளுக்கு 6 சிக்சர் அடித்த இந்திய வீரர் யுவராஜ் சிங், 'பாஜி' என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அடிப்படை விலைக்கே விலை போனார்கள்.

ஐபிஎல் தொடங்கப்பட்ட நேரத்தில் ஆபத்தான பேட்ஸ்மென் என கருதப்பட்ட கெயில், யுவராஜ் சிங், பந்துவீச்சில் மிரட்டிய மலிங்கா ஆகியோரை இன்று சீண்ட யாரும் முன்வரவில்லை என்பது வேதனையாகும்.

பெங்களூரு அணியில் விராட் கோலியுடன், தொடக்க ஆட்டத்தில் கெயில் களமிறங்கினால், சிக்சர், பவுண்டரிக்கு பந்து பறக்கும். அடிப்படை மிரட்டல் விடுத்த கெயிலுக்கு விலையாக ரூ.2 கோடி வைத்தும் இன்று ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

30 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற பெருமை கடந்த மாதம் முடிந்த வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் 69 பந்துகளுக்கு 146 ரன்கள் விளாசல் ஆகிய பெருமை இருந்தும் கெயில் கண்டுகொள்ளப்படவில்லை.

அடுத்ததாக இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்காவும் ஏலம் எடுக்கப்படவில்லை. மலிங்கா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவந்த காரணத்தால், அவரை ஏலம் எடுக்க அணிகள் முன்வரவில்லை. அவரை இதற்கு முன் தக்கவைத்து இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் மவுனம் காத்துவிட்டது.

ஐபிஎல் போட்டிக்கு முதல் முறையாக அறிமுகமான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட்டுக்கு அடிப்படை விலை ரூ.1.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டும் அவர் ஏலம்போகவில்லை. அதுமட்டுமல்லாமல், ஜான் பேரஸ்டோ, சாம் பில்லிங்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் விலை போகவில்லை.

மேலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஜான்சன், ஆஷஸ் போட்டியில் கலக்கிய ஜோஸ் ஹேசல் உட் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி வைக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படவில்லை.

மேலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா, இந்திய வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, பர்தீவ் படேல், முரளி விஜய், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா, நியூசிலாந்து வீரர் டிம் சவூதி, மெட்ஷெல் மெக்லனகன், மார்டின் கப்தில், மேற்கிந்திய தீவுகள் வீரர் சாமுவேல் பத்ரி ஆகியோரும் விலை போகாமல் உள்ளனர்.

ஆனால், ஓய்வு பெற்ற வீரர்களான ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூ.3.6 கோடிக்கு மெக்குலத்தை பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தது வியப்பாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x