Published : 23 Jan 2018 10:22 AM
Last Updated : 23 Jan 2018 10:22 AM

முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஸ் 7, ஹரிஸ் சோகைல் 9 ரன்களில் நடையை கட்டினர். அடுத்த 21 ரன்களை சேர்ப்பதற்குள் பாகிஸ்தான் அணி மேலும் 3 விக்கெட்களை தாரை வார்த்தது.

கேப்டன் சர்ப்ராஸ் அகமது 9 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். அடுத்து களமிறங்கிய சதப் கான் 0, பஹீம் அஸ்ரப் 7 ரன்களில் வெளியேறினர். 8-வது விக்கெட்டுக்கு பாபர் அசாமுடன் இணைந்த ஹசன் அலி அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடியால் அணியின் ஸ்கோர் மூன்று இலக்கங்களை எட்டியது. ஹசன் அலி 12 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது அமிர் 3 ரன்களில் நடையை கட்டினார். பாபர் அசாம் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி வீரராக காலின் மன்றோ பந்தில் ஆட்டமிழந்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, சேத் ரான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், சான்ட்னர் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

106 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. மார்ட்டின் கப்தில் 2, கிளென் பிலிப்ஸ் 3, டாம் புரூஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். காலின் மன்றோ 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், ராஸ் டெய்லர் 13 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ரூமான் ரயீஸ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக காலின் மன்றோ தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 25-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே ஒருநாள் போட்டித் தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணியின் தோல்வி பயணம் டி 20 தொடரிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி கடந்த இரு மாதங்களில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சொந்த மண்ணில் 13 ஆட்டங்களில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது.- ஏஏப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x