Published : 22 Jan 2018 03:49 PM
Last Updated : 22 Jan 2018 03:49 PM

தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ்ஸை புன்னகைக்க வைக்கும் காட்சி!

வாண்டரர்ஸ் பிட்சில் புற்கள் அதிக அளவில் விடப்பட்டுள்ளதால் பொதுவாக இன்னொரு கேப்டன் கூலாக இருக்கும் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் முகத்தில் புன்னகை தவழ்ந்துள்ளது.

இந்த வாண்டரர்ஸ் பிட்சில் பவுன்ஸ், ஸ்விங், வேகம் அதிகம் இருக்கும் என்பது ஏற்கெனவே திணறி வரும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ஒரு கெட்ட செய்தி, ஆனால் நம் பவுலர்களுக்கும் புன்னகை வருவிக்கும் பிட்சாக இது அமையும் என்பதால் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்களுக்கும் பிரச்சினைதான். ஆனால் ஏற்கெனவே சின்னாபின்னமாகியுள்ள இந்திய பேட்ஸ்மென்களுக்கு மேலும் சில சுயபரிசோதனைத் தேடல்களை இந்தப் பிட்ச் ஏற்படுத்தும் என்பது உண்மை.

அமைதியான ஒரு ஞாயிறில் நேற்று இந்திய அணி இங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பிட்சைப் பார்த்து நிச்சயம் கவலை அடைந்திருக்கும். 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணியை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலை இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும். புதனன்று வாண்டரர்ஸில் 3-வது டெஸ்ட் தொடங்குகிறது. ரஹானே மீண்டும் அணிக்கு வரும் சுவடுகள் தெரிகின்றன.

2-வது டெஸ்ட் போட்டியில் செஞ்சூரியனில் தயாரிக்கப்பட்ட பிட்ச் குறித்து டுபிளெசிஸ் தனது அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தெரிவித்திருந்தார், இந்திய பிராண்ட் கிரிக்கெட்டுக்கு ஒத்து வரும் பிட்சாக அது இருந்தும், மோசமான அணித்தேர்வு, பீல்டிங், கேப்டன்சி, மோசமான பேட்டிங்கினால் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

இந்தியாவில் நடுநிலையான பிட்சை அமைக்காமல் பந்துகள் கடுமையாகத் திரும்பும் குழிபிட்ச்களைப் போட்டு தங்கள் அணியை வீழ்த்தியது பற்றி டுபிளெசிஸின் கோபம் அவரது செஞ்சூரியன் பிட்ச் பற்றிய கருத்தில் வெளிப்பட்டது. இந்திய மாதிரி பிட்ச் தயாரித்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி தன் பந்து வீச்சு, பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்தியச் சவாலை முறியடித்தது.

டுபிளெசிஸின் கேப்டன்சி ஆக்ரோஷமானது ஆனால் அதற்காக தாறுமாறான நடத்தையைக் கொண்டதல்ல. அவர் தனது உத்திகளில் கருனையற்ற ஒரு கேப்டனாக இருக்கிறார். ஆட்டத்தைத் தீர்மானிக்கும் கணங்களை டுபிளெசிஸ் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

தனது களவியூகத்தின் மூலம் பேட்ஸ்மென்களுக்கு சவால் விடுக்கிறார், விராட் கோலிக்கு மிட்விக்கெட் பகுதியை காலியாக வைத்து அவரை பிளிக் ஆடத் தூண்டி எல்.பி.யில் வீழ்த்துமாறு செய்கிறார். பந்து வீச்சு மாற்றம் ஒவ்வொரு முறையும் வெற்றியடைந்துள்ளது. பேட்ஸ்மென் தெம்பா பவுமாவை எடுக்காமல் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசையும் எடுக்காமல் 4 வேகப்பந்து வீச்சு என்பதில் கொள்கைத் தீவிரம் இவருக்கும் பயிற்சியாளர் கிப்சனுக்குமான மன ஒற்றுமையைக் காட்டுகிறது.

டேல் ஸ்டெய்ன் காயமடைந்து வெளியேறிய போதும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியாவின் கதையை கேப்டவுனில் முடித்தனர். 2 டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க பீல்டிங் பிரமாதமாக அமைய, இந்திய அணி 9 கேட்ச்களை விட்டது. தென் ஆப்பிரிக்காவின் கள பீல்டிங்கின் தாக்கத்தை புஜாராவை விட யார் உணர்ந்திருக்க முடியும்?

ஒன்றுமில்லாததிலிருந்து வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ஏ.பி.டிவில்லியர்ஸ், பவுண்டரியில் அருமையான கேட்ச்களைப் பிடிக்கும் மோர்னி மோர்கெல் என்று தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் வாங்கிய 3-0 தோல்வியை எந்த விதத்திலும் மறக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டியது.

இந்தத் தொடரில் டுபிளெசிஸுக்கு இன்னும் இலக்கு முடிந்து விடவில்லை. அது ஏ.பி.டிவில்லியர்ஸ், ரபாடா ஆகியோர் வெளிப்படுத்திய 3-0 கிளீன் ஸ்வீப்பாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x