Published : 15 Jan 2018 08:58 PM
Last Updated : 15 Jan 2018 08:58 PM

டீன் எல்கருக்கு கேட்சுக்கே செல்லாத பார்த்திவ் படேல்; பும்ரா அபாரம்; டிவில்லியர்ஸ் அரைசதம்

கோலியின் மாஸ்டர் கிளாஸ் 153 ரன்களுக்குப் பிறகு இந்திய அணியை 307 ரன்களுக்கு மட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் மழை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் அதன் பிறகு தொடங்கி தற்போது வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்ஸை அஸ்வின், பும்ராவுடன் தொடங்கினார் விராட் கோலி, இது உண்மையில் ஆக்ரோஷமான ஒரு கேப்டன்சிதான். குறிப்பாக பும்ரா பயங்கரமாக வீசினார். 140-141 கிமீ வேகத்தில் பயங்கரமான இன்ஸ்விங்கர்களை அவர் வீசினார் அவ்வப்போது ஓரிரு பந்துகளை அதே லெந்த், கோணத்தில் வெளியே எடுக்கவும் செய்தார், இதனால் டிவில்லியர்ஸ் கடுமையாகத் தடுமாறினார், ஆனாலும் அவர் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 78 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்கிறார்.

முன்னதாக பும்ரா தன் முதல் ஓவர் 2-வது பந்திலேயே மார்க்ரமை எல்.பி.செய்தார். பந்து எழும்பும் என்று நினைத்து மார்க்ரம் கிரீசில் எம்பினார் ஆனால் பந்து சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து பின் கால்காப்பைத் தாக்க எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார். பந்து தாழ்வாக வந்தது. ஹஷீம் ஆம்லாவையும் இதே பாணியில் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆக்கினார், இம்முறை ஆம்லா லெக் திசையில் ஆட முயன்றார் ஆனால் பந்து மீண்டும் மட்டைக்குக் கீழ் தாழ்வாக வந்து கால்காப்பைத் தாக்கியது.

டீன் எல்கர் ஏகப்பட்ட பீட்டன்களில் 29 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது இன்னிங்ஸின் 25-வது ஓவரில் பும்ரா மீண்டும் ஒரு பந்தை ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் வீசி எழுப்பினார், எல்கர் அருகில் பந்து எழும்பி மட்டை விளிம்பில் பட்டு பார்த்திவ் படேலுக்கும், புஜாராவுக்கும் இடையே கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் தூரத்தில் சென்று பவுண்டரிக்குப் பறந்தது.

பார்த்திவ் புஜாராவைக் கையைக் காட்டினார், ஆனால் முதல் தவறு இது பார்த்திவ் சுலபமாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச். 2வது தவறு ஸ்லிப்பில் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் அருகில் முதல் ஸ்லிப் பீல்டர் நிற்காமல் தள்ளி நிற்பது. முதல் இன்னிங்ஸில் கோலி தள்ளி நின்றுதான் ரபாடாவுக்கு கேட்சை விட்டார், இன்று புஜாரா தள்ளி நின்றார், ஆனாலும் இது பார்த்திவ் படேல் எளிதாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் கோட்டை விட்டார். எல்கர் தற்போது 4 பவுண்டரி ஒருசிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். கோலி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அஸ்வின் பந்தை லாங் ஆனுக்கு மேல் ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் அடித்தார் எல்கர்.

3 ரன்களுகு 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா தற்போது எல்கர், டிவில்லியர்ஸ் 87 ரன் கூட்டணியினால் 90 ரன்கள் எடுத்து மொத்தமாக 118 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது. அஸ்வினும் அற்புதமாக வீசினார். இசாந்த், ஷமி டைட்டாக வீசினர்.

பாண்டியா ரன் அவுட், பார்த்திவ் படேல் செல்லாத கேட்ச் ஆகியவை இன்று ரசிகர்களின் ஏமாற்றத்துக்கும் கேலிக்கும் ஆளாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x