Published : 13 Jan 2018 03:13 PM
Last Updated : 13 Jan 2018 03:13 PM

2-வது டெஸ்ட்: முதலில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்; முடிவில் இந்தியா கை ஒங்கியது

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் 24 ரன்களுடனும், கேஷவ் மஹராஜ் 10 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 90 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா கடைசியில் தேவையில்லாமல் ரன் அவுட்டில் ஆம்லா மற்றும் பிலாண்டரை இழந்தது. ஹஷிம் ஆம்லாவுக்கு முன்னதாக பார்த்திவ் படேல் லெக் திசையில் டைவ் அடித்து கேட்ச் ஒன்றை கோட்டை விட்ட பிறகு அருமையாக ஆடினார்.

அதிக பவுன்ஸ் ஆகும் பிட்ச், கேப்டவுனை விடவும் ஸ்விங் வேகம் உள்ள பிட்ச் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்த பிறகு இடையில் என்ன ‘நடந்தது’ என்று தெரியவில்லை, துணைக்கண்டம் போல் ஒரு பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பந்து வீசும் வரை நாம் எதையும் இறுதியாகக் கூறுவதற்கில்லை. பிட்சில் புற்கள் இல்லாமல் மழிக்கப்பட்டது சில கேள்விகளை எழுப்பாமல் இல்லை. இதில் அஸ்வின் 31 ஓவர்களை வீசி 8 மெய்டன்களுடன் 90 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஹஷிம் ஆம்லா நன்றாக செட்டில் ஆகி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது அவர் 82 ரன்களில் இருந்தார், தென் ஆப்பிரிக்கா ஸ்கோர் 246/3. அப்போதுதான் மினி சரிவு கண்டது தென் ஆப்பிரிக்கா.

ஹர்திக் பாண்டியா வீசிய ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று ஆம்லாவின் நெஞ்சுயரத்துக்கு வந்தது, அவர் அதனை ஒருவழியாக தடுத்தாடிய போது லெக் திசையில் அருகிலேயே பந்து சென்றது, டுபிளெசிஸ் சிங்கிளுக்கு அழைத்தார், சற்றே தயங்கி ஓடினார் ஆம்லா. ஆனால் பாண்டியாவும் ஓடினார் பந்தை எடுக்க எடுத்தார் சற்றும் எதிர்பாராத விதமாக ரன்னர் முனையில் நேரடியாக ஸ்டம்பைப் பெயர்க்க ஆம்லா கிரீசுக்கு வெளியே சிக்கி ரன் அவுட் ஆனார். பாண்டியாவின் சமயோசிதத்தினால் விழுந்த விக்கெட், கபில்தேவ் இப்படிப்பட்ட ரன் அவுட்களை செய்துள்ளார். ஆம்லா 82 ரன்னில் அவுட்.

அடுத்ததாக குவிண்டன் டி காக், அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை லெந்தில் பிட்ச் செய்து திருப்ப காலை நகர்த்தாமல் அந்தப் பந்தை தள்ளியாட முயன்றார் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. பிறகு வெர்னன் பிலாண்டர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் பாண்டியாவின் பந்தை லெக் திசையில் தட்டி விட்டு திடுதிடுவென ஒரு ரன்னுக்கு எதிர்முனை நோக்கி ஓடினார், ரன்னர் முனையில் டுபிளெசிஸ் வராதே வராதே என்று கத்தியது பிலாண்டர் காதில் விழவில்லை, இருவரும் ஒரு முனையில் தேங்க பாண்டியா பேட்டிங் முனையில் பைல்களை அகற்றினார். 246/3லிருந்து 251/6 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. கடைசியில் மகராஜ் அடித்த ஷாட்டுக்கு மிட்விக்கெட்டில் பும்ரா 15 அடி முன்னால் நின்றதால் தலைக்கு மேல் பவுண்டரி ஆனது, பின்னால் நின்றிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும்.

முன்னதாக டிவில்லியர்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா ஆட்ட முடிவில் 269/6. கொல்கத்தாவில் சுருட்டியது போல் 300 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

முன்னதாக...

அஸ்வின் 2விக்., மார்க்ரம் 94 ரன்கள்; தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளை வரை  2 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

ஹஷிம் ஆம்லா 39 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று விழுந்த 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் கைப்பற்றினார். அஸ்வினுக்கு பந்துகள் திரும்பின, எழும்பின, ஆனால் அவர் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை அவரை ஒரு கட்டத்தில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்தனர்.

மார்க்ரம் மிக அருமையாக ஆடினார், தொடக்கத்தில் இசாந்த் சர்மாவின் பந்துகள் இருமுறை மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்புக்கு அருகில் சென்றது, பும்ராவின் ஒரு பந்து அவரை இரண்டாக்கி, உள்ளே வந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது, எட்ஜ் கூட ஸ்லிப் முன்னால் விழுந்தது. கேரி ஆகவில்லை.

மார்க்ரம் 150 பந்துகளில் 15 அருமையான பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்து அஸ்வின் ரவுண்ட் த விக்கெட் பந்தில் மட்டையில் மெலிதாகப் பட்டு பார்த்திவ் படேல் கையில் கேட்ச் ஆனது.

முன்னதாக ஏகப்பட்ட பீட்டன்களுடன் ஆடிய டீன் எல்கர் 31 ரன்களில் 4 பவுண்டரிகளுடன் வெளியேறினார், இதில் ஒரு பவுண்டரி ஆஃப் ஸ்டம்ப் லைனில் தனக்கு குறுக்காகச் சென்ற பந்தை மிட் ஆனில் அடித்த ஷாட் அபாரம். இவர் அஸ்வின் பந்தை ரீச் செய்ய முயன்று தொடர்ந்து தோல்வியடைந்த நேரத்தில் மேலேறி வந்து பந்தை அடிக்க முயன்றார், ஆனால் பந்து முன்னதாகவே பிட்ச் ஆகி சற்று, மிகச் சற்று எழும்பியது அடித்தார் பந்து சிலி மிட் ஆஃபில் விஜய் வயிற்றுப் பகுதியில் ஒட்டியது, அவர் அமுக்கினார்.

டீன் எல்கருக்கு ஒரு வாய்ப்பு லெக் திசை பவுண்டரியில் தவறான கணிப்பினால் தவறியது, ஆம்லாவுக்கு பார்த்திவ்  லெக் திசையில் டைவ் அடித்து வாய்ப்பு ஒன்றை விட்டார்.

பந்து வீச்சில் பும்ரா, ஷமி கடும் ஏமாற்றமளித்தனர். பும்ரா 13 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார், ஷமி மீண்டும் ஒரு முறை எந்தவித நோக்கமும் இல்லாமல் வீசி 8 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார், இசாந்த் சர்மா ஓரளவுக்கு நன்றாக வீசினார், ஆனால் வேகம் இல்லை. 13 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பாண்டியா சிக்கனமாகத் திகழ்ந்தார், 7 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். அஸ்வின் 18. ஓவர்களில் 54 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மார்க்ரம் ஆஃப் ஸ்டம்ப் கார்டு எடுத்து ஆடி இந்திய பவுலர்களுகு எல்.பி.ஆசைக் காட்டினார், இதனால் புல் லெந்தில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர், மிட் ஆன், மிட் ஆஃபில் அசத்தினார் மார்க்ரம். ஷார்ட் ஆகப் போட்டால் வெளுக்கவும் செய்தார்.

ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுடன் வீசியது போல் தெரிந்தாலும் இங்கும் அங்கும் எங்கும் வீசிக்கொண்டிருந்தார். இவரும் ஷமியும் நிறைய பவுண்டரி பந்துகளை வீசினர். இப்போது இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தல் ஆம்லா, டிவில்லியர்ஸ் கூட்டணியே, டிவில்லியர்ஸ் ஏற்கெனவே அஸ்வினை ஒரு அபாரமான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார்.

முன்னதாக...

புவனேஷ்வர் குமார் அதிர்ச்சி நீக்கம்; பார்த்திவ் படேல், ராகுல், இசாந்த் அணியில்: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெய்னுக்குப் பதிலாக லுங்கி நிகிடி என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிட்சில் புற்கள் இல்லை, ஈரப்பதம் இல்லை, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச், தென் ஆப்பிரிக்கா அதைத்தான் செய்தது, தானும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட் செய்வதாகவே இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பிற்பாடு பிட்ச் உடைந்தால் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அணியில் சில அதிர்ச்சிகர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, கோலி கூறியது போல் வெளியில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்களுக்கு இசையவில்லை, ரஹானே இல்லை, ரோஹித் சர்மாவே தொடர்கிறார். ஆனால் 10 கேட்ச்களை எடுத்து தோனி சாதனையை உடைத்த விருத்திமான் சஹா நீக்கப்பட்டு பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு இசாந்த்சர்மா சேர்க்கப்பட்டதே, விராட் கோலி, இதற்குக் காரணமாக கூடுதல் பவுன்ஸ் என்கிறார், ஆனால் அப்படி இதுவரை தெரியவில்லை. புவனேஷ்வர் குமார் உண்மையில் சிறப்பாக வீசியதோடு பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவரை ஏன் நீக்கினார்கள் என்று புரியவில்லை.

ஷிகர் தவணுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் வந்துள்ளார். புவனேஷ்வர் குமாரை நீக்கியதன் மீதான விமர்சனங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. இசாந்த் சர்மா வேண்டுமென்றால் பும்ராவை உட்கார வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டம் தொடங்கி இதுவரை எடுத்த எட்ஜ்கள் எதுவும் ஸ்லிப்பின் கைகள் வரை செல்லவில்லை, முன்பே தரைதட்டிவிடுகிறது. இதில் பவுன்ஸ் காரணமாக இசாந்த் சர்மாவை எடுத்துள்ளோம் என்கிறார் கோலி, ஒருவேளை இசாந்த் சர்மா கூடுதல் பவுன்ஸ் செய்வார் என்று கூறினாரோ என்னவோ? டீன் எல்கர் பந்தைத் தொட வேண்டும் என்று ஏற்கெனவே இசாந்த் சர்மாவிடம் பீட்டன்கள் ஆகியுள்ளார். இதுவரை 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 19 ரன்களுடனும் மார்க்ரம் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x