Last Updated : 12 Jan, 2018 08:45 PM

 

Published : 12 Jan 2018 08:45 PM
Last Updated : 12 Jan 2018 08:45 PM

வெளியில் உருவாக்கப்படும் கருத்துகளின் வழி செல்ல மாட்டோம்: ரஹானே தேர்வு குறித்து கோலி சூசகம்

முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே இல்லாமல் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது, தோல்விக்குப் பிறகு ரஹானே அணியில் இடம்பெற்றேயாக வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விராட் கோலி தன் பேட்டியில் ரஹானே இடம்பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:

சில வாரங்களில் அல்லது 5 நாட்களில் (உண்மையில் இரண்டேமுக்கால் நாள்தான்) விஷயங்கள் எப்படி மாறி விடுகின்றன என்பது வேடிக்கையாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் (ரஹானே) அணியில் இருக்க வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் திடீரென இன்னொரு தெரிவை விரும்புகின்றனர்.

ஒரு அணியாக எங்களுக்கு உள்ளதெல்லாம் சரியான, சமச்சீரான ஒரு அணியே. ஒரு வீரர் எதிர்பார்க்கப்படும் சேர்க்கைக்குப் பொருந்தினால் அவருடன் களமிறங்குவோம், நிச்சயமாக வெளியிலிருந்து உருவாக்கப்படும் கருத்துகளின் படியோ அல்லது ஊரே இதைப் பேசுகிறது என்பதற்காக அதன் வழி செல்லமாட்டோம்.

அவர் (ரஹானே) ஒரு தரமான பேட்ஸ்மென். தென் ஆப்பிரிக்காவில் நன்றாக ஆடியுள்ளார். உள்நாட்டுக்கு வெளியே அனைத்து சூழல்களிலுமே நன்றாக ஆடியுள்ளார். வெளியில் அவர்தான் நம் அணியின் திடமான, சீரான வீரர். ரோஹித் சர்மாவுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று நான் விளக்கிவிட்டேன். அதாவது, அஜிங்கியா ரஹானே இந்தப் போட்டியில் ஆடமாட்டார், அடவைக்க முடியாது என்றெல்லாம் நான் கூறவில்லை. எல்லா சாத்தியங்களும் திறந்தே இருக்கின்றன. பயிற்சி முடிந்தவுடன் முடிவெடுப்போம்.

பவுலர்கள் அருமையாக வீசினர், இதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பேட்டிங் சரியாக அமையவில்லை, பவுலிங் பற்றி கவலையில்லை. இருமுறை தென் ஆப்பிரிக்காவை சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

டெஸ்ட் போட்டிகளை வெல்ல திடமான பேட்டிங் தேவை. குறிப்பாக வெளிநாடுகளில் ஆடும்போது 60-70-80 கூடுதல் ரன்கள் அவசியமாகிறது. உள்நாட்டில் பவுலர்கள் வலுவாகத் திகழ்வதில் ஆச்சரியமில்லை, ஆனால் இங்கு அவர்கள் வலுவாக இருப்பது, பேட்டிங்கில் எங்களை நிரூபிக்க வேண்டிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

தீவிரம் என்று நான் கூறுவது களத்தில் இறங்கி நேரடியாக ஷாட்களை ஆடுவது என்பதல்ல. பந்தை ஆடாமல் விடுவது, தடுத்தாடுவது என்பதிலும் தீவிரம் அடங்கியுள்ளது. நம் உடல்மொழி, ஆட்டத்தைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதம். உடல்மொழி இவற்றைத்தான் சித்தரிக்கிறது. கடினமான தருணங்கள் உள்ளன, ஆனால் அவற்றையும் தீவிர மனோபாவத்தில் நாம் கடக்கலாம். பாசிட்டிவ் சிந்தனை என்பது ஒவ்வொரு பந்திலும் ரன் எடுப்பது என்று அர்த்தமல்ல. நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை நம் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. இப்படித்தான் நான் தீவிரம் என்பதைப் பார்க்கிறேன்.

விக்கெட் சரிவுகளினால் நாம் பதற்றம் அடைய வேண்டியதில்லை. வீரர்கள் இன்னும் தங்களை சரியாகச் செலுத்திக் கொள்ள வேண்டும். கடினமான பந்து வீச்சுக்கு எப்போதும் தயாராக இருப்பது அவசியம்” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x