Published : 04 Jan 2018 12:57 PM
Last Updated : 04 Jan 2018 12:57 PM

வெளிநாடுகளில் இந்த இந்திய அணி நன்றாக ஆடுகின்றனரா? பிலாண்டர் சந்தேகம்

நாளை (வெள்ளி) கேப்டவுனில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் அந்த அணியின் அபாயகர ஸ்விங் பந்து வீச்சாளர் பிலாண்டர் இந்திய அணியின் அயல்நாட்டு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பெரிய திருப்தி தெரிவிக்கவில்லை.

இந்த இந்திய அணி தன்னை இதுவரை கவரவில்லை என்று தெரிவித்த பிலாண்டர், “இவர்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டில்தான் ஆடிவருகின்றனர். எனவே இங்கு எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது.

இது இங்கு முற்றிலும் வேறு ஒரு ஆட்டமாக இருக்கும் முதல் டெஸ்ட்டை இந்திய அணி பாஸ் செய்த பிறகுதான் தெரியும், அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போம்” என்றார்.

கேப்டவுனில் கடும் வறட்சி காரணமாக பிட்ச் வறண்டுதான் காணப்படுகிறது. ஆனாலும் ஓரளவுக்கு புற்கள் காணப்படுகின்றன.

பயிற்சியாளர் ஓட்டைஸ் கிப்சன், இத்தகைய பிட்ச்தான் தேவை என்கிறார் ஆனால் பிலாண்டர், “மற்ற நியுலேண்ட்ஸ் பிட்ச்களை விட இது பச்சையாக உள்ளது என்று கூற மாட்டேன். என் வாழ்நாள் முழுதும் இங்கு விளையாடியுள்ளேன். இதே போன்ற பிட்சைப் பார்த்திருக்கிறேன், இவற்றில் பெரிதாக ஒன்றும் உதவியிருக்காது. ஆனால் புற்கள் இருக்கவே செய்யும். ஆனால் இது பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்காது” என்றார்.

இப்போதைய பிட்சில் பிட்சின் குறுக்காக இல்லாமல் நேராக, குத்துக்கோட்டு வாக்காக பிளவுகள் உள்ளன, இது ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு காலியான பிட்ச் போன்றதாகத் தெரிகிறது. இது குறித்து பிலாண்டர் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “அந்த பிட்ச் இதைவிட வித்தியாசமானது. அது இன்னும் பிளாட்டாக இருந்தது, இதில் கொஞ்சம் புற்கள் இருக்கிறது. ஆனால் இங்கு அடிக்கும் காற்றைப் பொறுத்ததே அனைத்தும். வடமேற்கு காற்று அடிக்கும், அப்போது பந்துகள் ஸ்விங் ஆகும்” என்றார் பிலாண்டர்.

சச்சின் டெண்டுல்கர் கூறியது போல் புதிய பந்தை எதிர்கொள்வதைப் பொறுத்து தொடர் அமையும், அதனால் தொடக்க வீரர்களுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x