Published : 27 Dec 2017 10:54 AM
Last Updated : 27 Dec 2017 10:54 AM

தென்னாப்பிரிக்க பவுலர்களை சமாளிக்க வியூகம்: இந்திய அணி வீரர் முரளி விஜய் பேட்டி

தென்னாப்பிரிக்க பவுலர்களைச் சமாளிக்க வியூகம் வகுத்துள்ளேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் கோலோச்சி வருகிறார் முரளி விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 2 சதங்களை விளாசினார் முரளி விஜய். தற்போது தென்னாப்பிரிக்கத் தொடருக்காக அவர் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பது உண்மைதான். அங்குள்ள சீதோஷ்ண நிலை வேறு. இங்குள்ள சீதோஷ்ண நிலை வேறு. எனவே அங்கு சென்றபிறகு சூழ்நிலையைக் கணித்து சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை ஆராய்ந்த பின்னர்தான் போட்டித் தொடர் எப்படி அமையும் என்பதைச் சொல்ல முடியும். இந்தத் தொடரில் வெல்ல முடியுமா அல்லது முடியாதா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

தென்னாப்பிரிக்க பவுலர்களைச் சமாளிக்க வியூகம் வகுத்துள்ளேன். டேல் ஸ்டெயின், மோர்க்கெல் போன்ற வீரர்களைச் சந்திக்க இந்திய வீரர்கள் தயாராகவுள்ளனர். நானும், ஷிகர் தவாணும் சில போட்டிகளில் தொடக்க வீரர்களாக இறங்குவோம்.

சில சயமம் நானும், கே.எல். ராகுலும் களமிறங்கி விளையாடுவோம்.

எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இதனால் நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைக் குவித்து எதிரணிக்கு நெருக்கடி தருகிறோம்.

எனக்கு எந்த பவுலர் பந்துவீசுகிறார் என்பது முக்கியமல்ல. பந்தைக் கணித்து ஆட முடிகிறதா என்பதே முக்கியம். நான் ஏற்கெனவே 2 முறை தென்னாப்பிரிக்கா சென்று தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் உள்ளது. அது இப்போது பயன்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x