Published : 10 Dec 2017 11:26 AM
Last Updated : 10 Dec 2017 11:26 AM

தோனி 65; மீதி 47: 112 ரன்களுக்கு இந்தியா சுருண்டது

தரம்சலா ஒருநாள் போட்டியில் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக இலங்கை அணி தன் அபாரப் பந்து வீச்சினால் இந்திய அணியை 112 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.

மீண்டுமொரு முறை பிட்ச், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆட்கொண்டு வென்றார் தோனி, அவர் 87 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து கடைசியாக பெரேரா பந்தில் டீப் கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார், நிதானமான, ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப ஆடிய அபாரமான ஒரு இன்னிங்ஸ். இந்திய அணியை மிக மோசமான ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆவதிலிருந்து காப்பாற்றியுள்ளார் மகேந்திர சிங் (கம்) தோனி.

சுரங்க லக்மல் அற்புதமான பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தடவிய இந்திய பேட்ஸ்மென்களுக்கு கொல்கத்தாவில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சுரங்க லக்மல் இன்றும் இந்திய பேட்டிங்கை ஆட்டிப்படைத்து 10 ஓவர்கள் 4 மெய்டன்கள் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று அவரது சிறந்த பந்து வீச்சைச் சாதித்தார்.

தொடக்க ஓவர்களில் சுரங்க லக்மல், ஆஞ்சேலோ மேத்யூஸ் அபாரமான லெந்தில் வீசினர். இந்திய பேட்ஸ்மென்கள் நிதானமில்லாமல் கொஞ்சம் முன்னதாகவே ஷாட் அடிக்கச் சென்றனர், தவறான ஷாட் தேர்வு, அபாரப் பந்த் வீச்சுக் கலவையில் 29/7 என்று சரிவு கண்டது. இந்திய வீரர்களின் கால் நகர்த்தல்கள் படுமோசமாக அமைந்தது. 4 பந்துகளை வெளியே வீசி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் அதனை வாரிக்கொண்டு அடிக்கும் பழக்கம் போகவில்லை, இதனால்தான் ஷிகர் தவண், மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் எட்ஜை போதிய அவுட்ஸ்விங்கரில் பிடித்தார் லக்மல்.

முதல் 5 ஓவர்களில் 2 ரன்கள், முதல் 10 ஓவர்களில் 11 ரன்கள் என்று ஆமைவேகத்தில் சென்று கொண்டிருந்தது ரன் விகிதம். மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் அனைவரும் எட்ஜ் செய்து வெளியேறினர். தினேஷ் கார்த்திக் பிளிக் ஷாட்டில் பேலன்ஸ் தவறினார் ஷ்ரேயஸ் ஐயர் பந்தை உள்ளே வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். 29/7, 40,50 ரன்களில் கதை முடிந்து விடும் என்ற அச்சுறுத்தல் இருந்தது.

மகேந்திர சிங்(கம்) தோனி:

ஸ்விங் அதிகமாக ஆனால் தோனியின் ஒரே உத்தி மேலேறி வந்து ஆடுவது, முதல் பந்தையே அப்படித்தான் ஆடினார், இன்று இந்த உத்தி வெகுவாகக் கைகொடுத்தது. அவர் மேலேறி வர வர இலங்கை பவுலர்கள் லெந்தை ஷார்ட் ஆக்கினர். குல்தீப் யாதவ்வை வைத்துக் கொண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் நல்ல பந்துகளை தடுத்தாடியும் தன் அனுபவ முத்திரையைப் பதித்தார். குல்தீப் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 19 ரன்களைச் சேர்க்க இருவரும் 41 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் குல்தீப் தனஞ்ஜயாவிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

அதன் பிறகு தோனி கொஞ்சம் வேகம் காட்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கவர், மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் என்று இடைவெளிகளை அருமையாகப் பயன்படுத்தினார். அதுவும் பிரதீப் பந்தை இருந்த இடத்திலிருந்தே மிட் ஆஃப் மேல் தூக்கி அடித்த சிக்ஸ் அவரது பவரை காட்டியது. அதே போல் பதிரனாவை நகர்ந்து கொண்டு அடித்த சிக்சரும் அற்புதமானது. 87 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 74,71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இன்று ஆடியது உண்மையில் பெரிய இன்னிங்ஸ் என்றே கூற வேண்டும்.

இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் வீசிய அனைவருக்கும் விக்கெட் கிடைத்தது.

முன்னதாக...

லக்மல் அபாரம்: இந்தியா சரிவு!

தரம்சலா ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி ரோஹித் சர்மா, தவண், தினேஷ் கார்த்திக், பாண்டே, ஐயர் விக்கெட்டுகளை இழந்து 14-வது ஓவரில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

சுரங்க லக்மல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி வருகிறார்.

தரம்சலா பிட்சில் பவுலர்களுக்கு கொஞ்சம் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கிடைக்கிறது, இதனை லக்மல், மேத்யூஸ் அருமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லக்மல் முதல் ஓவரை ரோஹித் சர்மாவுக்கு மெய்டனாக வீச 2-வது ஓவரின் கடைசி பந்தில் மேத்யூஸ் தவண் விக்கெட்டை எல்.பி.முறையில் கைப்பற்றினார். தவண் ஸ்கோரர்களை தொந்தரவு செய்யவில்லை.

மிடில் அண்ட் லெக்கில் வந்த பந்து கால்காப்பைத் தாக்கியது, அந்தப் பந்தை லெக் திசையில் ஆட முற்பட்டார், மாட்டவில்லை, மேத்யூஸ் பெரிய முறையீடு செய்தார், பலனில்லை ரிவியூ கேட்டார், அதில் மிடில் ஸ்டம்பின் மேல் பகுதியை தாக்கும் என்று ரிப்ளே காட்ட அவுட் ஆகி வெளியேறினார்.

ஷ்ரேயஸ் ஐயர் இறங்கினார் அவருக்கு மேத்யூஸ் ஒரு மெய்டன் வீசினார். இதற்கு அடுத்த ஓவரில் சுரங்க லக்மல் ரோஹித்தை வீழ்த்தி இந்தியாவை திணறடிக்கச் செய்தார். ரோஹித் சர்மா 13 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் நல்ல அளவுக்கு சற்று குறைவாக வீசி பந்தை அவுட் ஸ்விங் செய்ததோடு கொஞ்சம் கூடுதல் உயரம் எழும்பச் செய்தார், ரோஹித் அதைப்போய் மட்டையால் இடித்தார் எட்ஜ் ஆகி டிக்வெல்லா கேட்ச் எடுத்தார்.

தினேஷ் கார்த்தி, 18 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் கடுமையாகத் திணறினார். லக்மல் இவரை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார் என்றே கூற வேண்டும். நல்ல அளவில் விழுந்த பந்து உள்ளே வந்தது, மிட் ஆனில் ஆட முற்பட்டு சற்றே பேலன்ஸ் இழந்தார் இதனால் பந்து கால்காப்பைத் தாக்க நடுவர் அனில் சவுத்ரி கையை உயர்த்தினார். ஷ்ரேயஸ் ஐயரிடம் நீண்ட நேரம் ரிவியூ செய்யலாமா வேண்டாமா என்று நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் காலக்கெடு முடிந்தது. மிகவும் திணறலான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

மணீஷ் பாண்டே 15 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் வீசிய ஆஃப் ஸ்டம்ப் குட் லெந்த் பந்தை அக்ராசாக ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஷ்ரேயஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்து கடைசியாக தவறான ஷாட்டில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார், நுவான் பிரதீப் வீசிய வெளியே சென்ற ஃபுல் லெந்த் பந்தை கட் செய்ய முயன்றார் பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஒருமாதிரி ஆடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் ஆடி பவுல்டு ஆகி வெளியேறினார்.

இந்திய அணி குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆல் அவுட் ஆகும் அபாயத்திலிருந்து காக்க தோனியும் ஹர்திக் பாண்டியாவும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக...

டாஸ், அணி விவரம்:

தரம்சலாவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திசர பெரேரா முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

ஒருவேளை பனிப்பொழிவு இருக்கும் போது இந்திய பவுலர்கள் சிரமப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார் என்று தெரிகிறது.

இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே இல்லை, ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே அணியில் உள்ளார்.

இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா, தவண், ஷ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல்

இலங்கை அணி: தரங்கா, குணதிலக, திரிமானே, மேத்யூஸ், குணரத்னே, டிக்வெல்லா, திசர பெரேரா, சசித் பதிரனா, சுரங்க லக்மல், தனஞ்ஜய, நுவான் பிரதீப்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x