Published : 09 Dec 2017 08:25 PM
Last Updated : 09 Dec 2017 08:25 PM

கோலி, கேதார் ஜாதவ் இல்லாத இந்திய அணியை இலங்கை வீழ்த்துமா?- தரம்சலாவில் முதல் ஒருநாள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்த ரோஹித் சர்மாவின் தலைமையில் நாளை (ஞாயிறு) இந்திய அணி தரம்சலாவில் இலங்கை அணியை முதல் ஒருநாள் போட்டியில் சந்திக்கிறது.

கேதர் ஜாதவ் காயமடைந்து ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியதையடுத்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீப காலங்களில் கேதார் ஜாதவ் அருமையாக பேட் செய்து வருவதோடு, பந்து வீச்சிலும் சில வேளைகளில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இதனால் ஜாதவ் இல்லாதது பின்னடைவுதான்.

இந்தப் பகலிரவு ஆட்டம் ஞாயிறு காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது.

கோலி இன்னும் எந்தெந்த சாதனைகளை முறியடிப்பாரோ என்ற கவலையில்லாமல் இலங்கை அணி களமிறங்கும், மேலும் கோலி இல்லாத இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தவும் அந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை அணி 12 போட்டி தோல்விகளிலும் இந்திய அணி 7 தொடர்களை வென்ற நிலையிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்துமா என்பது கேள்விக்குறியே.

குறைந்தது இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்ய முடியாமல் முதலிடம் செல்வதைத் தடுத்தாலே இலங்கை அணிக்கு அது பெரிய விஷயம்தான்.

இலங்கை அணியில் அஞ்சேலோ மேத்யூச், அசேலா குணரத்னே, தனுஷ்கா குணதிலக திரும்பியுள்ளனர்.

அஜிங்கிய ரஹானே தன் மோசமான பார்மிலிருந்து மீள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் புதிய பந்தில் அடிக்கும் ரஹானே, பந்து பழசானவுடன் ஒருநாள் போட்டிகளில் ரன்களை விரைவில் எடுக்கத் திணறியதையும் பார்த்து வந்துள்ளோம். ஷ்ரேயஸ் ஐயர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அருமையான வாய்ப்பு. தினேஷ் கார்த்திக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தோனி தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிப்பாரா என்பதும் ஒரு சுவாரசியமான கேள்வியே.

உத்தேச இந்திய அணி வருமாறு:

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ரஹானே, தினேஷ் கார்த்திக், ஷ்ரேயஸ் ஐயர், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, சாஹல்.

இதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை ஆட்டம் தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று திசர பெரேரா கூறியுள்ளார்.

இலங்கை அணி முக்கிய அணி ஒன்றை வீழ்த்தியது சாம்பியன்ஸ் டிராபியில், அது இந்திய அணிதான்.

இந்த ஆண்டு 5-0 ஒயிட் வாஷ் 3 முறை வாங்கியுள்ளது இலங்கை அணி.

மேத்யூஸ் 88 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் குவித்த 10-வது இலங்கை வீரராவார்.

இந்தியாவை ஒருநாள் போட்டியில் இந்திய மண்ணில் கடைசியாக இலங்கை வென்றது 2009-ல். அதன் பிறகு இந்தியாவில் ஆடிய 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 8-1 என்று முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x