Published : 06 Dec 2017 05:55 PM
Last Updated : 06 Dec 2017 05:55 PM

தனஞ்ஜயா சதம், ரோஷன் சில்வா 74 நாட் அவுட்: டெல்லி டெஸ்ட்டை டிரா செய்தது இலங்கை

டெல்லி டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் 410 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து டிரா செய்தது, இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-0 என்று கைப்பற்றியது.

4-ம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் 5-ம் நாள் ஆட்டத்தில் இந்த தரமான பந்து வீச்சை வைத்துக் கொண்டு மீதமுள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிபெற முடியாமல் போனது ஏமாற்றமே.

ஆனால் அதே வேளையில் தனஞ்ஜயா 119 ரன்கள் எடுத்து காயத்தினால் வெளியேறினார். அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில்ல் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், நிரோஷன் டிக்வெல்லா 44 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக உடைக்க முடியாமல் 94 ரன்களைச் சேர்த்தனர்.

இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் 35 ஓவர்கள் வீசி 126 ரன்களுக்கு 1 விக்கெட்டையே கைப்பற்ற முடிந்தது.

விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் 243 மற்றும் 50 ரன்களை அடித்ததால் ஆட்ட நாயகனாகவும், தொடரில் 610 ரன்களை 2 இரட்டைச் சதங்கள் உட்பட 3 சதங்களுடன் அடித்ததால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய பீல்டர்களின் வெண்ணெய் கைகளால் சதம் அடித்த மேத்யூஸ், மாறாக மிக அருமையாக ஆடி சதம் கண்ட கேப்டன் சந்திமால் ஆகியோர் இந்திய அணியை வெற்றியிலிருந்து திசைத்திருப்பினர் என்று கூற வேண்டும், 2-வது இன்னிங்சில் புதுமுகங்களாக தனஞ்ஜயா மற்றும் ரோஷன் சில்வா டிராவை உறுதி செய்தனர்.

5-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது, இந்தியாவில் இப்படி முன்பு நடந்திருக்குமா என்பது சந்தேகமே. சந்திமால், தனஞ்ஜயா 112 ரன்களைச் சேர்த்தனர், பிறகு தனஞ்ஜயா, ரோஷன் 58 ரன்கள் சேர்த்தனர்.

பிட்ச் படுமோசமான பிட்ச், இதில் ஸ்பின்னும் ஆகவில்லை, வேகப்பந்து வீச்சுக்கும் ஒன்றுமில்லை. பந்தை மிட் ஆஃபிலிருந்து வீசினால் கூட திரும்பாது போலிருக்கிறது. அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் காலுக்குக் கீழேயே குத்திக் கொண்டாலும் எழும்பாது போலிருக்கிறது. இது போன்ற பிட்ச்களில் ஆடுவதனால் ஆய பயன் என்ன? என்பதைக் கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

தனஞ்ஜயா தொடை காயம் காரணமாக தொடர முடியாமல் வேளியேறிய போது, இந்தியாவுக்கு லேசாக ஒரு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது போல் தெரிந்தது, புதிய பந்தும் எடுக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட் வீழ்த்த எடுத்துக் கொண்ட முயற்சியெல்லாம் ரோஷன் சில்வாவின் உறுதியான உத்தியினால் முறியடிக்கப்பட்டது. மொகமது ஷமியின் பவுன்சர் ஒன்று இவர் விரல்களை பதம் பார்த்தது, இசாந்த் சர்மாவின் பந்து ஒன்றும் எழும்பி இவரை சிரமப்படுத்தியது. ஸ்பின்னைக் கொண்டு வந்தனர், ஜடேஜா பந்தை மேலேறி வந்து கவர் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார் சில்வா.

டிக்வெல்லா பாசிட்டிவாக ஆடினார், இதில் ஜடேஜா பந்து ஒன்றில் இவர் பீட்டன் ஆக ஸ்டம்பிங் வாய்ப்பு ஏற்பட்டது, ஆனால் பந்து சஹாவையும் கடந்து சென்றது. இப்படியே சென்று கொண்டிருந்த போது இன்னும் 35 நிமிடங்கள் ஆட்டமிருக்கும் போது இரு அணி வீரர்களும் கைகுலுக்கலில் இறங்கினர். ஆட்டம் டிரா ஆனது.

ஆனால் தனஞ்ஜயா தனது பொறுமையைக் காண்பித்து ஆடினாலும் சில வேளைகளில் நல்ல பவுண்டரிகள் சிலவற்றை அடித்தார், மொத்தம் 16 பவுண்டரிகளை அவர் அடித்தார், இதில் இசாந்த் சர்மாவை அடித்த இரண்டு புல் ஷாட்கள், மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஸ்வீப் ஷாட்கள் அபாரமானவை, எப்போதாவதுதான் ஸ்பின்னர்கள் இவரை பீட் செய்ய முடிந்தது. 110 ரன்களில் இருந்த போது அஸ்வின் கடினமான வாய்ப்பொன்றை தன் பந்து வீச்சில் விட்டார்.

இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தன்னம்பிக்கை அளிக்கும் தொடராக அமைந்துள்ளது, சுரங்க லக்மல், தனஞ்ஜயா , கேப்டன் சந்திமால், மேத்யூஸ் தன் பார்மைக் கண்டுபிடித்துக் கொண்டது என்று தரமான சில விஷயங்கள் இலங்கை அணியில் உள்ளது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x