Published : 03 Dec 2017 09:01 AM
Last Updated : 03 Dec 2017 09:01 AM

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடருக்கான அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா மோதல்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. 32 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த கால்பந்து திருவிழாவில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. மீதம் உள்ள 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகி உள்ளன. இம்முறை பலம் வாய்ந்த இத்தாலி, நெதர்லாந்து அணிகள் தகுதி பெறவில்லை.

இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணியும் இடம் பெறும் பிரிவு தேர்வு செய்யப்பட்டது. இதில் ‘ஏ’ பிரிவில் ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஈரான், மொராக்கோ அணிகளும், ‘சி’ பிரிவில் பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகளும், ‘டி’ பிரிவில் அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

‘இ’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும், ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா அணிகளும். ‘ஜி பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து, துனிசியா, பனாமா அணிகளும், ஹெச் பிரிவில் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. கால்பந்து திருவிழாவின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யா ஜூன் 14-ம் தேதி சவுதி அரேபியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ரஷ்யாவில் உள்ள 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்று ஜூன் 30-ம் முதல் தொடங்குகிறது. நாக் அவுட் சுற்றில் வெற்றி காணும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 14-ம் தேதி 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி 15-ம் தேதி மாஸ்கோவில் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோத வாய்ப்பு உள்ளது. ஆனால் ஸ்பெயின் இடம் பெற்றுள்ள பிரிவில் வலுவான போர்ச்சுக்கல் அணியும் இடம் பிடித்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியனான ஜெர்மனி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் அணியை சந்திக்கக்கூடும். இந்த நிலைமை பிரேசில் அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தால் மட்டுமே ஏற்படும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x