Published : 07 Nov 2017 09:09 PM
Last Updated : 07 Nov 2017 09:09 PM

என்னை ஏன் ஹெட்மாஸ்டர் என்று அழைத்தார்கள் என்பதை சிலர் புரிந்து கொள்வார்கள்: அனில் கும்ப்ளே

விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு தோன்றி பயிற்சியாளர் பொறுப்பை உதறிய அனில் கும்ப்ளே தனக்கு ஏன் ஹெட்மாஸ்டர் என்ற பெயர் வந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவுடன் உரையாடிய போது அனில் கும்ப்ளே கூறியதாவது:

தன்னம்பிக்கை என்பது நாம் வளர்த்துக்கொள்ளும் மதிப்பீடுகளிலிருந்து வருகிறது. நம் பெற்றோர், பாட்டி, தாத்தா ஆகியோரைப் பார்த்து நம் மதிப்பீடு வளர்கிறது.

என்னுடைய தாத்தா பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அதனால் ஹெட்மாஸ்டர் என்ற பெயர் என்னை நோக்கி மீண்டும் மீண்டும் வந்தது. என் கரியரில் பிற்காலத்திலும் இந்தப் பெயர் என்னை துரத்தியது. இங்குள்ளவர்களில் சிலர் புரிந்து கொள்வார்கள் (நான் எதைக்குறிப்பிடுகிறேன் என்று).

ஒரு கிரிக்கெட் வீர்ர் ஒவ்வொரு தொடருக்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தொடர் அளிக்கும் சவால்களுக்கும் அடுத்த தொடர் அளிக்கும் சவால்களுக்கும் வேறுபாடு உள்ளன. 2003-04 ஆஸ்திரேலியா தொடரை நான் கூற வேண்டும், அப்போது அணியில் என் இடத்தைத் தக்க வைக்க போராடினேன். நான் எனது 30 வயதுகளில் இருந்த போதே பலர் நான் ஓய்வு பெறுவது பற்றி பேசத் தொடங்கினர்.

அப்போதுதான் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது, புகழ்பெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் நாம் வென்றோம். முதல் நாள் ஆட்டத்தில் ரன்களை அதிகம் கொடுத்தேன், ஆனால் பிறகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். கூக்ளியை வித்தியாசமாக வீச கற்றுக் கொண்டேன். இதனை நான் எனது டென்னிஸ் பந்துகளில் ஆடிய காலக்கட்டத்தில் கற்றுக் கொண்டேன். அப்போதுதான் என் ஆட்டத்தில் முன்னேற்றம் அடைய சில நுட்பமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

1990-ம் ஆண்டுகளின் சிறப்பென்னவெனில் உள்நாட்டில் அனைத்தையும் வென்றோம். ஆனால் 2001-ல் ஆஸ்திரேலியா இங்கு வந்து ஆடிய டெஸ்ட் தொடர்தான் இந்திய அணியை வலுப்பெறச் செய்தது, நான் காயம் காரணமாக அந்தத் தொடரில் இல்லை. அந்தத் தொடரிலிருந்துதான் அணி தன் உண்மையான ஆற்றலை உணர்ந்த தருணம் தொடங்கியது. அதன் பிறகு இந்திய அணி வலுவடைந்து கொண்டே வந்தது. இப்போது நம்பர் 1 நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு கூறினார் அனில் கும்ப்ளே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x