Last Updated : 24 Oct, 2017 10:21 AM

 

Published : 24 Oct 2017 10:21 AM
Last Updated : 24 Oct 2017 10:21 AM

இந்திய சுழல் கூட்டணியை தகர்த்தது எப்படி?- நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் விளக்கம்

சமீப காலமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானித்து வரும் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் சுழற் கூட்டணியை முறியடிக்க ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்தியதாக நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. 281 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நிலையில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து அணி ராஸ் டெய்லர், டாம் லேதம் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது.

லேதம் 103 ரன்களும், டெய்லர் 95 ரன்களும் விளாசினர். இந்த கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய மண்ணில் விரட்டலின் போது 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. டெய்லர், லேதம் கூட்டணியின் சாதனை விரட்டலால் விராட் கோலியின் 31-வது சாதனை சதம் வீணானது. இந்த கூட்டணிக்கு எந்த ஒரு வகையிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்கவில்லை. இவர்கள் இருவரும் கூட்டாக 20 ஓவர்களை வீசி 125 ரன்களை விட்டுக்கொடுத்தனர். குல்தீப் யாதவ் மட்டுமே ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணியை வீழ்த்தியது குறித்து ராஸ் டெய்லர் கூறியதாவது:

ஸ்வீப் ஷாட்கள் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். இதனால் அவர்கள் வீசும் அளவை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். லேதம் இதனை தனித் திறமையுடன் நடத்திக் காட்டினார். ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி அவரும் தொடர்ந்து ஸ்வீப் செய்து கொண்டிருந்தார்.

மூன்றரை மணி நேரம் கடும் உஷ்ணத்தில் பீல்டிங் செய்ததால் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தோம். நல்ல தொடக்கம் அமையும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறந்த முறையில் கையாள முடியும் என்று நினைத்தோம். முன்பெல்லாம் நியூஸிலாந்து அணி இங்கு வந்து திணறியதையே பார்த்திருக்கிறேன். மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ கூட்டணி அருமையாகத் தொடங்க நானும் லேதமும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தோம். அதன் பிறகே வெற்றிக்கு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.

கடந்த காலங்களில் நடு ஓவர்களில் அதிக அளவிலான பந்துகளை ரன் சேர்க்காமல் வீணாக்கினோம். இதனால் கிரீஸில் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒரு சில ஷாட்களை மேற்கொண்டு ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். பயிற்சி ஆட்டத்தில் லேதமும் நானும் சிறப்பாக ரன்கள் எடுத்தோம். அங்கிருந்து அந்த ஆட்டத்தை முதல் போட்டிக்கும் எடுத்து வந்தது திருப்தி அளிக்கிறது.

டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசினார், இந்திய அணி அடுத்த போட்டியில் இன்னும் கடினமாக எங்களை அணுகும். ஒரு வெற்றி எங்களுக்கு தொடரை கொடுத்து விடும். ஆனால் புனே ஆடுகளம் கடினமானது என்று நாங்கள் அறிவோம். இந்த வெற்றியிலேயே தங்கி விடாமல் அடுத்த போட்டியையும் நன்றாகத் தொடங்க வேண்டும். இவ்வாறு ராஸ் டெய்லர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x