Published : 21 Oct 2017 10:13 AM
Last Updated : 21 Oct 2017 10:13 AM

பிபா யு 17 உலக கோப்பை கால்பந்து: அரை இறுதிச் சுற்றில் நுழைவது யார்? -இங்கிலாந்து - அமெரிக்கா இன்று பலப்பரீட்சை

17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று அமெரிக்க அணியை எதிர்த்து இங்கிலாந்து களம் இறங்குகிறது. மற்றொரு கால் இறுதிப் போட்டியில் கானாவும் மாலியும் மோதுகின்றன.

பிபா யு 17 கால்பந்து தொடரில் கோவாவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் கால் இறுதிப் போட்டியில் வலிமையான அணிகளாகக் கருதப்படும் இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோதுகின்றன. வலுவான கால்பந்து பின்னணியைக் கொண்ட இந்த இரு அணிகளும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அதனால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜப்பானை 5-3 என்ற கோல்கணக்கில் பெனாலிடி ஷூட் அவுட்டில் வென்று, இங்கிலாந்து அணி கால் இறுதியில் தடம் பதித்துள்ளது. கடந்த போட்டியில் ஜப்பானின் கோல் அடிக்கும் முயற்சிகளை சாதுர்யமாக தடுத்த கோல் கீப்பர் கர்டிஸ் ஆண்டர்சனை இப்போட்டியில் இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஏஞ்சல் கோமஸ், ஹட்சன் ஒடோய், பிலிப் போடன் ஆகியோர், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் தங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடும்.

இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கூப்பர், “இந்தத் தொடரில் இதுவரை நாங்கள் தோல்வியே தழுவதில்லை. இது எங்கள் ஆற்றலைப் பறைசாற்றும் வகையில் உள்ளது. அமெரிக்காவை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர். இப்போட்டியில் நாங்கள் தாக்குதல் ஆட்ட முறையை பயன்படுத்துவோம்” என்றார்.

இங்கிலாந்து அணியைப் போலவே அமெரிக்க அணியும் இன்றைய கால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் என்று தீவிரமாக நம்புகிறது. கேப்டன் ஜோஷ் சார்ஜெண்ட், டிம் வியா, அயோ அகினோலா ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவது அதன் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜான் ஹாக்வொர்த், “இந்தத் தொடரில் முதல் முறையாக ஒரு ஐரோப்பிய அணியை எதிர்த்து ஆடவுள்ளோம். இங்கிலாந்து அணி வலிமையானது என்பதையும், இத்தொடரில் அந்த அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். அதற்கு ஏற்றவாறு இன்றைய ஆட்டத்தில் வியூகங்களை வகுப்போம்” என்றார்.

கானா - மாலி மோதல்

குவாஹாட்டியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு கால் இறுதிப் போட்டியில், ஆப்பிரிக்க அணிகளான கானாவும், மாலியும் மோதுகின்றன.

யு17 தொடரில் ஏற்கெனவே 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கானா அணி, 3-வது முறை பட்டம் வெல்லும் கனவுடன் இருக்கிறது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தின் இறுதி ஆட்டத்தில் ஏற்கெனவே மாலி அணியை கானா 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இது கானா அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக எரிக் அயியா உள்ளார்.

“எங்கள் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் ஆடி கோப்பையை வெல்ல முயற்சிப்போம். எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழையும் எங்கள் வீரர்கள், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறி விடுகின்றனர். அதை சரிசெய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கால் இறுதிப் போட்டியில் எங்கள் வீரர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று கானா அணியின் பயிற்சியாளர் சாமுவேல் பாபியன் கூறியுள்ளார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இராக்கை 5-1 என்ற கணக்கில் வென்றதால், கால் இறுதிப் போட்டியை அதிக தன்னம்பிக்கையுடன் மாலி அணி எதிர்கொள்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரரான லசானா டியாயே இந்த தொடரில் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளார். அதனால் அவரை மையமாக வைத்தே மாலி அணி செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x