Published : 19 Oct 2017 02:58 PM
Last Updated : 19 Oct 2017 02:58 PM

104 பந்துகளில் 176 ரன்கள்; வ.தேசப் பவுலிங்கைப் புரட்டி எடுத்த டிவில்லியர்ஸ்: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

பார்லில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸ் 104 பந்துகளில் 176 ரன்களைப் புரட்டி எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி 353 ரன்களை விளாசி பிறகு வங்கதேசத்தை 249 ரன்களுக்குச் சுருட்டி தொடரை வென்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

3-வது விக்கெட்டுக்காக ஹஷிம் ஆம்லாவுடன் (85) சேர்ந்து டிவில்லியர்ஸ் 136 ரன்களைச் சேர்த்தார். ஆம்லா 85 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் டிவில்லியர்ஸ் 360 டிகிரி பேட்டிங்கில் கருணையற்ற விளாசலில் இறங்கினார். மொத்தம் டிவில்லியர்ஸ் அடித்த 7 சிக்சர்களில் 6 சிக்சர்கள் 17 பந்துகளில் அடிக்கப்பட்டது. இரட்டை சதம் நிச்சயம் உண்டு, தென் ஆப்பிரிக்காவின் 400 ரன்களும் உண்டு என்று எதிர்பார்த்த வேளையில் 48-வது ஓவரில் டிவில்லியர்ஸ் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மொத்தம் 104 பந்துகளில் 15 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 176 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணி லிட்டன் தாஸ், மற்றும் தமிம் இக்பாலை 11 ஓவர்களில் இழந்தது. இம்ருல் கயேஸ் (68), முஷ்பிகுர் ரஹிம் (60) இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இது ஒன்றும் தென் ஆப்பிரிக்க இலக்குக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை, ஆட்டத்தின் 19வது ஓவரில் வெர்றிக்கான ரன் விகிதம் ஓவருக்கு 8 ரன்களைக் கடக்க 33-வது ஓவர் வாக்கில் வெற்றிக்கான ரன் விகிதம் 10 ரன்களைக் கடந்தது.

இம்ருல் கயேஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு அரைசதம் கண்டு இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்தார். தாஹிரின் அடுத்த ஓவரில் ஷாகிப் உல் ஹசன் நடையைக் கட்டினார். 34-வது ஓவரில் பிரிடோரியசிடம் முஷ்பிக்குர் ரஹிம் வெளியேறினார். இங்கிருந்து வங்கதேச அணி பூப்போன்று உதிர்ந்தது. பெலுக்வயோ 4 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 47.5 ஓவர்களில் 249 ரன்களுக்குச் சுருண்டு தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது.

ஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடி தர்பார்...

முன்னதாக முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் டி காக், ஆம்லா மூலம் நல்ல தொடக்கம் கண்டது. 18-வது ஓவர வரை இருவரும் 3 பவுண்டரிகளையே அடித்திருந்தாலும் ஸ்கோர் 90 ரன்களை எட்டியது.

ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஒரு அபாரமான ஸ்பெல்லில் ஒரே ஓவரில் டி காக் (46), டுபிளெசிஸ் (0) ஆகியோரை வீழ்த்தினார். இங்கு சுதானமாக ஆடியிருந்தால் வங்கதேசம் கொஞ்சம் தென் ஆப்பிரிக்காவை மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் டிவில்லியர்ஸுக்கு மஹமுதுல்லா ஒரு ரன் அவுட் வாய்ப்பையும், ஸ்லிப்பில் நசீர் ஹுசைன் ஒரு கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டனர். அதன் பலனை டிவில்லியர்ஸ் என்னவென்று காட்டினார். இதனையடுத்து 34 பந்துகளில் அரைசதம் கண்ட டிவில்லியர்ஸ் மேலும் 34 பந்துகளில், அதாவது 68 பந்துகளில் தன் 25-வது ஒருநாள் சதத்தை அடித்தார்.

டிவில்லியர்ஸ் இன்னிங்ஸின் சிறப்பு அம்சம் என்னவெனில் அவர் அடித்த 15 பவுண்டரிகளில் பெரும்பாலும் கவர் திசையிலும் 7 சிக்சர்கள் அனைத்தும் மிட்விக்கெட் ஸ்கொயர் லெக் திசையிலும் வந்தன.

மேலும் வங்கதேசத்துக்கு சேதம் ஏற்படாமல் ரூபல் ஹுசைன் (4/62) டிவில்லியர்ஸை வீழ்த்தினார். மஷ்ரபே மோர்டசா, தஸ்கின் அகமது சரியான அடி விழுந்தது, மோர்டசா 10 ஓவர்களில் 82 ரன்களையும், தஸ்கின் அகமத் 9 ஓவர்களில் 71 ரன்களையும் வாரி வழங்கினர். இருவரும் சேர்ந்து 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களை வழங்கினார்கள் 4 வைடுகளையும் வீசினர்.

கிழக்கு லண்டனில் 3-வது இறுதி ஒருநாள் நடைபெறுகிறது, டிவில்லியர்ஸ் ஆட்டம் கண்முன்னே வந்து போக அடுத்த போட்டியில் ஒருவித அச்சத்துடனேயே வங்கதேசம் களமிறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x