Last Updated : 16 Oct, 2017 08:15 PM

 

Published : 16 Oct 2017 08:15 PM
Last Updated : 16 Oct 2017 08:15 PM

யு-17 உ.கோப்பை; ஜெர்மனி மாஸ்டர் கிளாஸ்: கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி

ஜெர்மனிக்கும் கொலம்பியாவுக்கும் இடையே நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் 4-0 என்று ஜெர்மனி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அபாரமானத் திறமையுடன் தன் சக்தியையும் பயன்படுத்தினர் ஜெர்மன் வீரர்கள். கேப்டன் மற்றும் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஜான் ஃபியட் ஆர்ப் 7வது மற்றும் 65வது நிமிடங்களில் கோல் வலையைத் தாக்க, யான் பைசக் 39-வது நிமிடத்திலும் ஜான் யெபோவா 49வது நிமிடத்திலும் கோல்களை அடித்து காலிறுதிக்கு ஜெர்மனியை இட்டுச் சென்றனர்.

காலிறுதியில் பிரேசில் அல்லது ஹோண்டுராஸ் அனியை அக்டோபர் 22-ம் தேதி ஜெர்மனி அணி எதிர்கொள்கிறது.

பிரேசில், ஹோண்டுராஸை வீழ்த்தி விட்டால் பிறகு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பிரேசில் அணிகள் மோதும் போட்டியில் ரசிகர்கள் விருந்துக்கு குறைவிருக்காது.

ஆனால் கொலம்பிய தடுப்பாட்ட வீரர்கள் 4 பேர் மற்றும் கோல் கீப்பர் கெவின் மையர் ஆகியோர் செய்த தவறுகளே 4 கோல்கள் விழுந்ததற்குக் காரணம்.

சில வேளைகளில் தடுப்பாட்ட வீரர்களின் தவறுகள் காமெடியாகக் கூட ஆனது. இந்திய அணியை 2-1 என்று வீழ்த்திய கொலம்பிய அணிக்கு இந்தப் போட்டி மறக்க வேண்டிய போட்டியாக மாறிப்போனது.

இன்னொரு முக்கிய வீரர் லியாண்ட்ரோ கம்பாஸ், இவரும் அன்று இடது புறத்தில் இந்திய அணிக்கு எதிராக பயங்கரமாக ஆடினார், ஆனால் அவரை இரண்டாவது பாதியில்தான் கொலம்பியா களமிறக்கியது, ஆனால் இவர் இறங்கும்போதே கொலம்பிய அணி 0-2 என்று கோல்களில் பின் தங்கியிருந்தது.

இன்றும் காம்பாஸ் அருமையான சில மூவ்களில் அபாயகரமாகத் திகழ்ந்தார், ஆனால் ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்கள் சுவராக நின்றனர்.

உடலளவில் நன்கு வளர்ந்திருந்த ஜெர்மனி வீரர்கள், கொலம்பியர்களின் தந்திரமான தொலைதூர பாஸ் ஆட்டத்தை முறியடித்தனர், தூக்கி அடித்த ஷாட்களில் பல ஜெர்மனி வசம் சிக்கியதே நடந்தது.

ஜெர்மனி வலது புற வீர்ர் யெபோவா மற்றும் இடது புற வீரரான டெனிஸ் ஜாஸ்ட்ரெசெம்ப்ஸ்கி இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இருவரும் இருபுறமும் அபாயகரமாக, வேகமாக ஆடினர். கேப்டன் ஆர்ப் எப்போதும் போல் மிகச்சிறப்பாக ஆடினார். கொலம்பியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

தொடக்கத்தில் யெபோவா பாஸை கேப்டன் ஆர்ப் எடுத்துக் கொண்டு சென்ற போது கொலம்பிய கோல் கீப்பருடன் ஒன் டு ஒன் என்ற நிலை ஏற்பட்டது. இதில் முதல் ஷாட்டை கோல் கீப்பர் சரியாக சேகரிக்கவில்லை, பந்து மீண்டும் ஆர்ப்பிடம் வர இடது காலால் ஒரே உதையில் வலையின் இடது மேல் மூலைக்கு பந்து கதறிக்கொண்டு கோல் ஆனது. ஜெர்மனி முன்னிலை பெற்றது.

14வது நிமிடத்தில் கொலம்பியா ஒரு அருமையான நகர்வில் பந்தைக் கொண்டு செல்ல அந்த அணியின் ராபர்ட் மேஜிஸ் இடது காலால் அடித்த ஷாட் கடினமான கோணமாக அமைந்ததால் கோலைத் தவறவிட்டது.

கொலம்பிய கோல் கீப்பர் மையர் பல தருணங்களில் பந்தைப் பிடிக்கத் திணறினார். இவரது திணறல் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்துக்கு மேலும் உற்சாகம் அளிப்பதாக அமைந்தது.

39வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் யான் பைசெக்கை கொலம்பிய வீரர்கள் கவர் செய்யவில்லை, மார்க் செய்யப்படாத அவர் சக்தி வாய்ந்த தலை ஷாட்டினால் 2-வது கோலை அடித்தார்.

இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி ஆதிக்கம் தொடர, கொலம்பிய தடுப்பாட்டம் சொதப்ப ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

4-வது கோல் காமெடியான தடுப்பாட்டத்தினால் வந்ததுதான். கொலம்பிய வீரர் கில்லர்மோ டெகு, பந்தை தங்கள் கோல் கீப்பருக்கு பின்-பாஸ் செய்யும் முயற்சியில் பந்தை ஜெர்மன் கேப்டன் ஆர்ப்பின் உடலில் வாங்கச் செய்தார், ஆர்ப் விடுவாரா கோல் கீப்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை கோலாக மாறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x