Last Updated : 09 Oct, 2017 03:18 PM

 

Published : 09 Oct 2017 03:18 PM
Last Updated : 09 Oct 2017 03:18 PM

நிறவெறி இழிவுபடுத்தல்தான் ஆஸ்திரேலிய அணிகளை நான் ஆதரிக்காததற்குக் காரணம்: மனம் திறக்கும் உஸ்மான் கவாஜா

சிட்னியில் தான் வளரும் காலங்களில் அனுபவித்த நிறவெறி ரீதியான இழிவுபடுத்தல்களே விளையாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று பாகிஸ்தானில் பிறந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மனம் திறந்துள்ளார்.

‘பிளேயர்ஸ்வாய்ஸ்.காம்.ஏயு’ என்ற இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ள, 30 வயது வீரர் உஸ்மான் கவாஜா, ‘எங்கள் சிறுபிராயத்தில், வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் இருந்து வந்த நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்கள் ஆஸ்திரேலிய அணிகள் மீது கோபத்தை மூட்டின’ என்று கூறியுள்ளார்.

தன்னுடைய ஜூனியர் ஆட்ட நாட்களில் விளையாட்டு மைதானங்களில் நிறவெறி வசைகள், கேலி, கிண்டல்கள் மிகப்பரவலாகக் காணப்பட்டதாகக் கூறுகிறார் உஸ்மான் கவாஜா. அதாவது, “வீரர்கள் அவர்கள் பெற்றோர்கள் மீது வசையைத் தாங்க இரும்பு மனம் வேண்டும்” என்று எழுதியுள்ளார் கவாஜா.

“சில வசைகள், கேலிகள் நான் மட்டுமே அனுபவித்தது, வெளியில் சொல்ல முடியாதது. அது இன்னமும் கூட என்னைக் காயப்படுத்துகிறது. ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள மாட்டேன். நான் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நிறவெறி வசையை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். சில பெற்றோர்கள் இதனை மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

இந்த நிறவெறிப் போக்குதான் என்னுடைய நண்பர்கள், அதாவது ஆஸ்திரேலியாவில் பிறக்காத என் நண்பர்கள் பலர் விளையாட்டில் ஆஸ்திரேலிய அணியை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள், நானும் கூட அப்படித்தான் இருந்தேன்.

குறிப்பாக கிரிக்கெட், இது மே.இ.தீவுகளாக இருக்கலாம், அல்லது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நிறவெறிப்போக்குகளைப் பார்த்திருக்கிறேன். இதனால்தான் பிரையன் லாரா எனக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர், நான் நேர்மையாகக் கூற விரும்புகிறேன்.

இப்போது திரும்பிப் பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணியை நான் ஆதரிக்கவில்லை என்பது ஏமாற்றமாகவே உள்ளது. எங்கள் சிறுபிராய காலத்தில் எங்களைச் சுற்றியும் எங்களுக்கும் நடந்தவற்றினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீது கடும் கோபமே ஏற்பட்டது. அவர்கள் எங்களை போல் இல்லை.

நான் மரியாதையான, எளிமையான, அமைதியான ஒரு சூழலில், இத்தகைய மனநிலையை வளர்த்துக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்த போது அவர்கள் அராஜகமாக நடந்து கொண்டனர். எனது பாரம்பரியத்தை கிண்டல் செய்யும் வசைபாடும் நபர்கள்தான் அதிகம் ஆனார்கள்.

இந்த நிறவெறி மனநிலைதான், வெள்ளையர் அல்லாதவர்கள் ஆஸ்திரேலிய அணிக்குள் வருவதற்கு நீண்ட காலம் ஆனது. கடந்த காலங்களில் நிறவெறியும் அரசியலும் அணித்தேர்வில் இருந்து வந்தது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது.

‘நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடியிருக்கலாம் நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லையெனில் நான் கருப்பு/இந்தியர்/பாகிஸ்தானி, அதனால் நான் விளையாடுவதை நிறுத்தி விட்டேன்’ இந்த வாசகங்களை நான் என் வாழ்நாள் முழுதும் என் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மட்டுமின்றி எதேச்சையாக யாரையாவது சந்தித்தால் கூட கேட்டிருக்கிறேன்.

இந்த நிறவெறி அனுபவங்களைக் கூறியவர்களின் குரல்களில் இருந்த வருத்தம், துயரம், வெறுப்பு மற்றும் கோபம் எனக்கு முக்கியமானதாகப் பட்டது. நான் மது அருந்தவில்லையெனில் ஆஸ்திரேலியன் அல்ல என்று போதிக்கப்பட்டது.

ஆனால் நான் வளர்ந்து விட்டேன் ஆஸ்திரேலியாவும் வளர்ந்து விட்டது. விஷயங்கள் நிறைய மாறிவிட்டன. ஆஸ்திரேலியர்களில் ஒரு பகுதியினர் என்னையும் பிறரையும் இவ்வாறு நடத்தினர் என்பதைப் புரிந்து கொண்டேன், இவர்கள் ஒரு சிறுபகுதியினர்தான்.

உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போது ஆஸ்திரேலிய அணிக்காக உயிரை விடும் ஒரு ரசிகனாக இருந்தேன், ஆனால் கடந்து வந்த பாதை எனது இந்தத் தன்மையை சிதைத்தது.

நானும் பலரைப்போல் கிரிக்கெட்டை விட்டு போயிருப்பேன், என் அம்மா கூட 10-ம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் வேண்டாம் படிப்பில் கவனம் செலுத்து என்றார். ஒரு சரியான துணைக்கண்ட அம்மாவாக அவர் இருந்தார். ஆனால் என் தந்தை நான் இரண்டையும் செய்ய முடியும் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஆடுவதை விடுவோம், நியூசவுத் வேல்ஸுக்கு ஆடுவது மிகவும் கடினம். ஆஸ்திரேலியாவில் மிகவும் கடினமான அணி நியூசவுத்வேல்ஸ்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் மெதுவே மாற்றமடைந்து வருகிறது ஆஸ்திரேலியா என்றால் உண்மையில் என்னவென்பதை அது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. பலதரப்பட்ட மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச அணியாக வாய்ப்பு உருவாகியுள்ளது” இவ்வாறு கூறினார் உஸ்மான் கவாஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x