Published : 07 Oct 2017 03:10 PM
Last Updated : 07 Oct 2017 03:10 PM

ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு

தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே நாளில் எடுத்து ரஞ்சி சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இந்த இன்னிங்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டில் பெரிதும் விதந்தோதப்பட்ட நிம்பால்கரின் 443 நாட் அவுட் இன்னிங்ஸ் ஆகும்.

இந்நிலையில் 2-ம் நாளான இன்று 271 ரன்களிலிருந்து தொடங்கிய பிரஷாந்த் சோப்ரா 363 பந்துகளில் 44 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 338 ரன்கள் எடுத்து 5-வது விக்கெட்டாக வெளியேற, இமாச்சல் அணி 148 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் எடுத்து தன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இவர் இந்த இன்னிங்ஸின் போது சுமீத் வர்மா (79) என்பவருடன் இணைந்து இருவரும் 2வது விக்கெட்டுக்காக 187 ரன்களையும், பிறகு உடனடியாகவே பி.தோக்ரா (99) என்பவருடன் இணைந்து இருவரும் 3-வது விக்கெட்டுக்காக 264 ரன்களையும், பிறகு விக்கெட் கீப்பர் பெய்ன்ஸ் (80) உடன் இணைந்து இருவரும் 5-வது விக்கெட்டுக்காக 135 ரன்களையும் சேர்த்துள்ளனர்.

இது ஒரு அசாத்தியமான இன்னிங்ஸ் என்று கிரிக்கெட் பண்டிதர்கள் பிரஷாந்த் சோப்ராவைப் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x