Published : 29 Sep 2017 03:40 PM
Last Updated : 29 Sep 2017 03:40 PM

எங்கே விக்கெட்டுகள்? பரிதாப வங்கதேசம்: வறுத்து எடுக்கும் தென் ஆப்பிரிக்கா 407/1

போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் சற்று முன் வரை தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 407 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

தொடக்க வீரர் டீன் எல்கர் 170 ரன்களுடனும், ஹஷிம் ஆம்லா 135 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 211 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.

எல்கர் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்களையும் ஆம்லா 17 பவுண்டரிகளையும் 1 சிக்சரையும் அடித்துள்ளார்.

முதல் விக்கெட்டுக்காக தென் ஆப்பிரிக்காவின் மர்க்ரம் மற்றும் டீன் எல்கர் இணைந்து நேற்று 196 ரன்களுக்கு வறுத்தெடுத்தனர். தற்போது ஆம்லா, டீன் எல்கர் வறுத்தெடுத்து வருகின்றனர்.

முஸ்தபிசுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், மெஹதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, மஹமுதுல்லா, மொமினுல் ஹக், சபீர் ரஹ்மான் என்று 7 பவுலர்களைப் பயன்படுத்தியும் மைதானம் நெடுக பீல்டர்கள் ஓடிக்கொண்டிருப்பதுதான் மிச்சமாகியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார் என்பதே!!

மொத்தம் 44 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் இதுவரை விளாசப்பட்டுள்ளன. உள்நாட்டில் கூப்பிட்டு சில அணிகளை வென்று பேசாத பேச்சும் பேசிய வங்கதேச அணிக்கு உண்மையான டெஸ்ட் போட்டி என்ன என்பது இப்போது தெரிந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

ஒருவேளை இந்தத் தொடர் முடிந்தவுடன் மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை சாலையில் ஓடியிருந்தால் வங்கதேசத்துக்கே கூட வந்திருக்கலாம் என்று வங்கதேச வீரர்களில் பலர் நினைக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x