Last Updated : 22 Sep, 2017 08:51 PM

 

Published : 22 Sep 2017 08:51 PM
Last Updated : 22 Sep 2017 08:51 PM

எப்படியாவது மளமள விக்கெட்டுகள் சரிவை தடுத்து நிறுத்த வேண்டும்: ஸ்மித் புலம்பல்

தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் விக்கெட்டுகள் மளமளவென சரிவடையும் போக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 253 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.இதன் மூலம் வெளிநாட்டு மைதானங்களில் கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த அணி கடைசி 8 விக்கெட்களை 112 ரன்களுக்கு தாரை வார்த்தது. 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அடிக்கடி இதுபோன்று சரிவை சந்திக்கிறோம் என்பதை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். அதிக அளவிலான சரிவை கண்டுள்ளோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும்போது சிறந்த முடிவை எடுக்க வேண்டும். இது மாற்றப்பட வேண்டும். ஒழுங்காக விளையாடத் தொடங்க வேண்டும். தற்போதைய செயல் திறன் போதுமானதாக இல்லை.

வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அழுத்தமான சூழ்நிலையில் களத்தில் எப்படி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இந்த ஆட்டத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை நாங்கள் பெறவில்லை. வேடிக்கையான பிழைகளை செய்கிறோம். இந்தியா போன்ற தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இதுபோன்ற தவறுகளை செய்ய வீரர்களுக்கு அனுமதியில்லை.

மைதானத்துக்கு வெளியே அமர்ந்து கொண்டு, இது நிறுத்தப்பட வேண்டும் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் களத்தில் நாம் என்ன செய்துவருகிறோமோ அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பந்துகளை நெருக்கமாகப் பார்த்து ஆட வேண்டும் என்கிறார்கள், ஒருவேளை ரொம்பவும் நெருக்கமாகப் பார்த்து ஆட்டத்தை ஆட மறந்து விடுகின்றனர் போலும். அதிகமாக சரிவுகள் காண்பது நிச்சயம் நல்லதுக்கல்ல.

இந்தப் பிட்சில் 253 ரன்களை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் நிறைய தவறுகளைச் செய்தோம், நெருக்கடியில் எங்கள் திறமைகளை செவ்வனே செயல்படுத்துவதில்லை. கொத்தாக விக்கெட்டுகளை விடுகிறோம், இப்படி ஆடக்கூடாது

ஸ்டாய்னிஸ் கடைசி வரை சிறப்பாக விளையாடினார். ஆனால் முதல் 4 இடங்களில் களமிறங்கும் வீரர்களில் நானோ அல்லது டிரெவிஸ் ஹெட் ஆகியோரில் யாராவது ஒருவர் கடைசி வரை களத்தில் நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். நாங்கள், எங்களது திறன்களை மிகுந்த அழுத்தத்தில் போதுமான அளவுக்கு செயல்படுத்தவில்லை. இந்தியா போன்ற அணிக்கு எதிராக தேவையான அளவு ரன்களை நாம் எடுக்காவிட்டால், பல ஆட்டங்களில் வெற்றி பெற முடியாது.

புதிய பந்தில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இரு முனைகளிலும் பந்துகளை ஸ்விங் செய்து எங்களது தடுப்பாட்டத்துக்கு கடும் சவால் கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வேகத்தை குறைந்து வீசி பந்துகளை நன்கு சுழலச் செய்தனர்.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x