Published : 22 Sep 2017 07:20 PM
Last Updated : 22 Sep 2017 07:20 PM

சிங்கிள் ‘பை’ ஓடியதற்காக விராட் கோலி மீது பாய்ந்த மேத்யூ வேட்

எதையும் சுலபத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மறக்க மாட்டார்கள். குறிப்பாக மேத்யூ வேட். விராட் கோலி டெஸ்ட் தொடரின் போது காயமடைந்து வெளியேறியதைக் கேலி செய்யும் விதமாக நேற்று மேத்யூ வேட் கோலியிடம் சில வார்த்தைகளைப் பரிமாறி கொண்டார்.

ஆஸ்திரேலிய பேட்டிங்கில் 33-வது ஓவரில்தான் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அந்த அணியை மூழ்கடித்தார், ஆனால் இந்தியா பேட் செய்த போது இதே 33-வது ஓவரில் சம்பவம் ஒன்று நடந்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏதோ விதத்தில் 33-வது ஓவர் நேற்று ஆஸ்திரேலிய அணியை பாதித்துள்ளது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய பந்து ஒன்று எழும்பாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தாழ்வாகச் சென்றது. அதை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சேகரிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. பந்தும் அவர் கையில் பட்டு சற்று தூரம் சென்றது. இதனையடுத்து ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி கோலியும், ஜாதவ்வும் ஓடினர்.

ஏற்கெனவே வெயில் தாங்க முடியாமல் தத்தளித்த மேட் வேட் இந்த சிங்கிளைக் காண பொறுக்க முடியாமல் விராட் கோலியிடம் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார், அது டெஸ்ட் தொடரில் விராட் கோலி காயமடைந்து வெளியேறியதை கேலி செய்யுமாறு அமைந்ததோடு கோலியின் ஆட்ட உணர்வையும் சாடினார் மேத்யூ வேட்.

ஸ்டம்ப் மைக்கில் அவர் கூறியதாக வெளியானது என்னவெனில், “நானும் உன்னைப்போல் அழுதிருப்பேன், ஓய்வறைக்குச் சென்று நல்ல அழுகையைப் போட்டிருப்பேன். உங்களுக்காக எல்லோரும் வருந்த வேண்டும்” என்று அவர் ஓவர் முடிந்து முனை மாறும்போது கோலியிடம் கூறியதாக ஆஸ்திரேலிய, இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு கோலியும் தன் பாணியில் மிகவும் ஆக்ரோஷமாக கையை ஆட்டி ஏதோ பதில் அளித்தார். ஆனால் அவரது வார்த்தைகள் ஸ்டம்பில் மைக்கில் சரியாக கேட்கவில்லை. ஸ்டாய்னிஸும் சில வார்த்தைகளைக் கோலியிடம் கூறினார்.

ஆனால் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் மேத்யூ வேடின் செய்கையை ரசிக்கவில்லை. மாறாக அவர் சாடிய போது, “ஒரு ரன், இது பெரிய விஷயமா? அவர் மிஸ்பீல்ட் செய்தார், அப்போது அவர் காயமடைந்தாரா இல்லையா என்பது 2ம் பட்சம்தான். நானாக இருந்தால் என் ஆட்டம் பற்றிதான் கவலைப்படுவேனே தவிர இப்படி எதிரணி மீது பாய மாட்டேன். கோலி அனைவரிடமும் சண்டையிட விரும்புவது போல் தெரிகிறார், ஆனால் அவர் மற்றவர்களுடன் என்ன செய்கிறார் என்பதை விட மற்றவர்களை விட 10 மடங்கு சிறப்பாக விளையாடுகிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x