Published : 21 Sep 2017 10:26 PM
Last Updated : 21 Sep 2017 10:26 PM

அசாத்திய ஓவரில் குல்தீப் ஹாட்ரிக் சாதனை; ஆவேசப் பந்து வீச்சில் இந்தியா அபார வெற்றி

 

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த ஆஸ்திரேலிய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது.

ஸ்டாய்னிஸ் அபாரமான ஒரு தனிமனிதப் போராட்ட இன்னின்ங்சில் 65 பந்துகளில் 3 சக்திவாய்ந்த சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஒரு புறம் நிற்க அவருக்கு உறுதுணையாக ஒருவரும் நிற்காமல் ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

252 ரன்கள் என்பது டீசண்ட் என்றார் ரஹானே. ஆனால் இது நிச்சயம் பேட்டிங் சாதக ஆட்டக்களம் இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி புவனேஷ் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் சுருண்டது. மேலும் திருப்பு முனையாக ஸ்டீவ் ஸ்மித் அபாரமக ஆடிவந்த நிலையில் கோலியின் அருமையான களவியூகத்தில் மீண்டும் பாண்டியா ஷார்ட் பிட்ச் பவுன்சரில் ஸ்மித்தை வீழ்த்தினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா 148/8 என்று மீள முடியா சரிவுக்குச் சென்றது.

அசாத்தியமான அந்த 33-வது ஓவர்: குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை!

இந்த 33-வது ஓவர் வரை குல்தீப் யாதவ் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் அருமையான ஒரு களவியூகத்தில் கோலி மீண்டும் குல்தீப் யாதவ்வை 33வது ஓவரை வீச அழைத்தார்.

மேத்யூ வேட் ஓவரை எதிர்கொண்டார். முதல்பந்தை வேட் தடுத்தாடினார். 2-வது பந்தில் குல்தீப் யாதவ் பந்தை இடது கை லெக் ஸ்பின் வீச பந்து கொஞ்சம் நன்றாகவே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது, நல்ல பார்மில் இல்லாத வேட் அதனை ஒரு கோணமாக பேட்டைக் கொண்டு சென்று கட் ஆட முயன்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. வேட் 2 ரன்களில் வெளியேறினார்.

3-வது பந்து ஆஸ்டன் ஆகர் எதிர்கொண்டார். இது ஒரு அருமையான லூப் மிகுந்த புல்டாஸ், அதாவது ஆகரின் கண் பார்வை வட்டத்துக்குள் சிக்காமல் வந்த ஒரு மேலிருந்து வீழும் புல்டாஸ். அவர் பந்தை மிஸ் செய்த பிறகு பந்து கால்காப்பருகே பிட்ச் ஆகி தாக்கியது, நடுவர் கையை உயர்த்தினார். ஸ்டாய்னிஸைப் பார்த்தார் ஆகர், அவர் முகத்தில் ஒரு ரிவியூ ஆசை தெரிந்தது, ஆனால் ஸ்டாய்னிஸ் மறுக்க ஆகர் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

4-வது பந்தை புதிய பேட்ஸ்மென் பாட் கமின்ஸ் எதிர்கொண்டார். அதே ஆக்‌ஷனில் பந்தை ஸ்பின் செய்தார் குல்தீப், பந்து இம்முறை வலது கைபேட்ஸ்மெனுக்கு லெக் ஸ்பின் ஆனது, ஆனால் குல்தீப் வீசியது இடது கை கூக்ளி. பந்து மட்டையின் விளிம்பில் பட்டது தோனி விடுவாரா என்ன? மைதானம் அலறியது குல்தீப் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3-வது ஹாட்ரிக்.

புவனேஷ் குமார் அபார ஸ்விங் பவுலிங்: கார்ட்ரைட் வார்னர் காலி!

253 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா தன்னம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கலாம். ஆனால் புவனேஷ் பந்து வீச்சும், அவர்களது பதற்றமும் ஆச்சரியமேற்படுத்தியது.

முதல் 18 பந்துகளில் 15 பந்துகளைச் சந்தித்த கார்ட்ரைட் 1 ரன்னை மட்டும் எடுத்து அதிக அழுத்தத்தை ஏற்றிக் கொண்ட நிலையில் 3-வது ஓவர் கடைசி பந்தில் புவனேஷிடம் பவுல்டு ஆனார். குட் லெந்த் பந்து உள்ளே வருமா, வெளியே செல்லுமா என்ற சந்தேகத்தில் கார்ட்ரைட் மட்டையைக் கொண்டு வர இன்ஸ்விங் ஆகி பவுல்டு ஆனார். ஏரோன் பிஞ்ச் இல்லாததை ஆஸி. உணர்ந்திருக்கும்.

ஸ்மித் இறங்கி பும்ரா பந்தில் பீட்டன் ஆனார். பிறகு ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார். டேவிட் வார்னர் நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் கடைசியில் 9 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்குமாரின் அவுட்ஸ்விங்கருக்கு மட்டையை பந்தின் திசையில் கொண்டு போய் எட்ஜ் செய்தார், ரஹானே கேட்ச் பிடித்தார். இவ்வகை பந்துகளை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வலைப்பயிற்சியில் வார்னர் நிறைய முறை எதிர்கொண்டிருக்கலாம், ஆனால் இன்று அவுட்.

டிராவிஸ் ஹெட் இறங்கி பும்ரா பந்தில் மட்டையின் உள்விளிம்பில் ஸ்டம்புக்கு அருகில் பந்து செல்ல ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்தே ஷார்ட்டாக அமைய பாயிண்டில் பவுண்டரி பறந்தது. பும்ரா முதல் 3 ஓவர்களில் 19 ரன்கள், அவருக்கு இன்று ஒருநாள் லீவ் விட்டு விட வேண்டியதுதான்.

புவனேஷ் குமார் தனது ஸ்விங் மூலம் கடும் பிரச்சினைகளைத் தொடர்ந்து கொடுத்து கொண்டிருந்தார். டிராவிஸ் ஹெட்டிற்கும் ஒரு பந்து எட்ஜ் ஆக முதல் ஸ்லிப்பில் ரோஹித் சர்மா கேட்சைக் கோட்டை விட்டார்.

ஸ்மித்தும் தனது பேட்டிங்கை அபாரமாக ஆடத் தொடங்க கேட்ச் விடப்பட்ட ஹெட்டுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 76 ரன்கள் சேர்க்கப்பட்டன. 39 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட், ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சாளரான சாஹல் வீசிய புல்டாஸை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம் ஆனால் பாண்டேயிடம் நேராக மிட்விக்கெடில் கேட்ச் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 21 ரன்களே வந்தன.

கிளென் மேக்ஸ்வெல் இதில் 2 சிக்சர்களுடன் 14 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார் மேக்ஸ்வெல். ஒன்று டீப் மிட்விக்கெட்டுக்கு ஸ்வீப்-ஸ்வீட் சிக்ஸ். அடுத்த பந்தையும் முட்டிக்கால் போட்டு ஸ்கொயர்லெக்கில் இன்னொரு சிக்ஸ் விளாசினார் மேக்ஸ்வெல்.

குஷியான தோனி...

ஆட்டத்தின் 23-வது ஓவரை சாஹல் வீச வந்தார். பந்துகள் நன்றாகத் திரும்பத் தொடங்கிய கட்டம் அது. 3 பந்துகளில் ரன் இல்லை. ஆனால் தோனி ஏதாவது ஆலோசனை வழங்கினாரா என்று தெரியவில்லை.

மேக்ஸ்வெல் மேலேறி வருவதைப் பார்த்து விட்ட சாஹல் பந்தை மெதுவாக பிளைட் செய்தார், மேலும் மிடில் அண்ட் லெக்கில் வீசினார். பிட்ச் ஆகும் இடத்துக்கு தன்னால் மட்டையைக் கொண்டு செல்ல முடியாது என்று உணர்ந்த மேக்ஸ்வெல் லெக் திசையில் திருப்பி விட நினைத்தார். ஆனால் பந்து வலது கால்காப்பில் பட்டு தோனியிடம் செல்ல அருமையான ஒரு ஸ்டம்பிங்கை நிகழ்த்தியதோடு, இந்த விக்கெட்டை அப்படிக் கொண்டாடினார் தோனி, அவர் இதுவரை இப்படி ஒரு விக்கெட்டைக் கொண்டாடிப் பார்த்ததில்லை. இது மேஜிக் பந்து என்பதாலா அல்லது தனது ஆலோசனை எதுவும் பயனளித்து விட்டது என்பதாலா தெரியவில்லை, உண்மையில் தோனி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பிறகு ஸ்மித் தனது 65-வது பந்தில் அரைசதம் கண்டார், ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவர் இந்தத் தொடரில் அடிக்கும் முதல் அரைசதமாகும் இது.

இந்நிலையில் முதல் 5 ஓவர்களில் 32 ரன்கள் என்று சுமாராக வீசிய பாண்டியா 30வது ஓவரை மீண்டு வீச வர ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆனால் ஸ்மித்துக்கு ஏற்கெனவே மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் என்று களவியூக பொறி வைக்கப்பட்டது தெரியவில்லை, பாண்டியா ஒரு பவுன்சரை வீச அதன் வேகம் உயரம் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்து கொண்ட ஸ்மித் புல்ஷாட் ஆட அது ஜடேஜாவின் ஒரு நல்ல கேட்ச் ஆனது 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார், இதுதான் இன்றைய வெற்றியின் திருப்பு முனையாகும்.

இதன் பிறகுதான் வேட், ஆகர், கமின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் யாதவ் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு சீல் வைத்தார்.

சாஹல் தொடர்ந்து அருமையாக வீசி ஒருகட்டத்தில் 8 ஓவர்கள் 1 மெய்டன் 20 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.

ஸ்டாய்னிஸ் ஒருமுனையில் தனிநபராகப் போராடினார். முதலில் குல்தீப் யாதவ்வை 2 பவுண்டரிகள் விளாசினார். கூல்ட்டர் நைல் பாண்டியா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார், இதுவும் பவுன்சர்தான்.

இனி சரிப்பட்டு வராது என்று நினைத்த ஸ்டாய்னிஸ், சாஹலை நேராக ஒரு அரக்க சிக்ஸ் அடித்தார். மட்டையிலிருந்து புறப்பட்ட உயரத்திலேயே நேர் சிக்ஸ். பிறகு பாண்டியாவை ஒரு நேர் சிக்ஸ் அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார். பிறகு பும்ராவின் தாழ்வான புல்டாஸ் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் ஆனது.

ஸ்டாய்னிஸ் 65 பந்துகளில் 62 ரன்களுடன் ஒரு முனையில் தேங்க, புவனேஷ் குமார், ரிச்சர்ட்சனை எல்.பி.யில் வீழ்த்தினார். இந்தியா 2-0 முன்னிலை.

ஆட்ட நாயகனாக அலட்டிக்கொள்ளாமல் 92 ரன்களை அற்புதமாக எடுத்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

புவனேஷ் குமார் 6.1 ஓவர்கள் 2 மெய்டன் 9 ரன்கள் 3 விக்கெட். குல்தீப் யாதவ் 54 ரன்கள் ஹாட்ரிக், சாஹல் 34 ரன்களுக்கு 2 விக்கெட்.

ஆஸ்திரேலியா மீண்டும் ரிஸ்ட் ஸ்பின்னில் வீழ்ந்தது. இடது கை பேட்ஸ்மெனுக்கு ஒரு ஆப் ஸ்பின்னர், வலது கைபேட்ஸ்மெனுக்கு இடது கை ஸ்பின்னர் அல்லது லெக் ஸ்பின்னர் என்ற சேர்க்கையைவிட சாஹல் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர், குல்தீப் இடது கை ரிஸ்ட் ஸ்பின் ஒரு ‘டெட்லி காம்பினேஷன்’ ஆகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x