Published : 20 Sep 2017 05:48 PM
Last Updated : 20 Sep 2017 05:48 PM

புல் தரை கொல்கத்தா ஆடுகளத்தில் மீண்டெழுமா ஆஸி.? வியாழன் 2-வது போட்டி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (வியாழன்), தொடர் ஒருநாள் தோல்விகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி ஓரளவுக்கு புற்கள் காணப்படும் ஆடுகளத்தில் மீண்டெழ வாய்ப்புள்ளது என்று ஆஸி. கேப்டன் நம்புகிறார்.

ஸ்மித் கேப்டன்சி மீதும் சில கேள்விகள் எழுந்துள்ள நிலையில் நாளை இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கூடுதல் விறுவிறுப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள்:

சென்னையில் இந்திய அணி 11/3 என்று இருந்த நிலையிலும் பிறகு 87/5 என்ற நிலையிலும் ஆஸ்திரேலியா பந்து வீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. தோனி, ஹர்திக் பாண்டியா களத்தில் நிற்கும்போது தோனிக்கும் அவருக்கும் அதிக நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். தோனிக்கு எளிதான சிங்கிள்களைக் கொடுக்காமல் நிறுத்தியிருந்தால், எதிர்முனையில் பாண்டியாவுக்கு நெருக்கடி கூடியிருக்கும். மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஒவ்வொரு 6 பந்துகளுக்கு ஒருமுறையும் பாண்டியா சிக்ஸ் அடித்திருப்பது தெரிந்திருந்தால் ஸாம்ப்பாவை அன்று ஸ்மித் கொண்டு வந்திருக்க மாட்டார். அவர் அடித்த 19 சிக்சர்களில் 14 சிக்சர்கள் நேராக அடிக்கப்பட்டது. எனவே அதற்கு களவியூகம் அமைக்க முடியாது, வேகப்பந்து வீச்சு வியூகம்தான் வகுக்க முடியும்.

ஆனால் ஆஸ்திரேலிய நடு ஓவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஸ்லாக் ஓவரில் மிடில் ஸ்டம்பில் பேட்ஸ்மென்களின் தொண்டைக்குழிக்கு வீசும் பவுலர்களை ஸ்மித் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மேலும் பேட்டிங்கில் வெறும் ஆக்ரோஷம் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் ஷார்ட் தேர்வில் கவனம் இருப்பதில்லை, சாஹல், குல்தீப் யாதவ் போன்றவர்களை எதிர்கொள்ள போதிய உத்திகள் ஆஸி. பேட்ஸ்மென்களிடம் இல்லை.

ஸ்மித் போன்று அனுபவமிக்க வீரரே பாண்டியாவின் விரல் மூலம் வீசப்பட்ட பந்தில் ஆட்டமிழக்க நேரிட்டது. தொடர்ந்து இருதரப்பு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்களை சுழற்சி முறையில் களமிறக்கியதால் செட்டில் ஆன அணியாக அது இல்லாமல் போனது, மாறாக இந்திய அணி இருதரப்பு ஒருநாள் தொடர்களில் நிறைய ஆடி வெற்றிகளைக் குவித்த்தோடு, ஒரு 12-15 வீரர்களை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்திய அணியில் பலவீனம் இல்லாமலில்லை, அன்று கூல்டர்-நைல் அதை நிரூபித்தார். கோலி, பாண்டேயை அடுத்தடுத்து வீழ்த்தி சிக்கல் ஏற்படுத்தினார், அவரது பந்துகள் நல்ல ஸ்விங் ஆவதோடு, வேகமும் கொண்டது. அன்றே பாண்டியாவை அடிக்காமல் செய்திருந்தால் தோனியின் இன்னிங்ஸ் பெரிய இன்னிங்ஸாக தெரிந்திருக்காது. மேலும் 50 ஓவர்கள் நடைபெற்றிருந்தாலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும், அப்படி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தால் தோனியின் இன்னிங்ஸ் மெதுவானதாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கும். அதாவது இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்திருக்கலாம் என்று அனைவரும் பேசியிருப்பார்கள், ஆனால் கிரிக்கெட்டில் ‘செய்திருக்கலாம்’ ‘இப்படியாகியிருந்தால்’ ஆகியவற்றுக்கெல்லாம் இடமில்லை, கடைசியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே ரெக்கார்டில் நிற்கப் போகிறது. ஆகவே அன்று தோனி-பாண்டியா கூட்டணி ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றியைப் பறித்தது என்பதுதான் சரியாக இருக்க முடியும். மேலும் சாஹல், குல்தீப் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை சென்னையில் வீழ்த்தினர்.

கடந்த முறை இங்கிலாந்து கொல்கத்தாவில் ஆடியபோது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் கொஞ்சம் இந்திய பேட்ஸ்மென்களைப் படுத்தினார்கள். ஆஸ்திரேலியாவின் கூல்ட்டர்-நைல் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் கொல்கத்தா அணிக்காக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதே போன்ற பிட்சில்தான் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சித் தோல்வி கண்டது. விராட் கோலிக்கு அந்த நினைவு வராமல் இருக்க வேண்டும்.

பிட்ச் நிலவரம்:

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் 61 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்பின்னர்கள் 24 விக்கெட்டுகளையே கைப்பற்றினர்.

எனவே அங்கு ஓரளவுக்கு வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் இருக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனாலும் கடைசி நேரத்தில் பிட்ச் மழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த முறையும் ஓரளவுக்கு புற்கள் ஆடுகளத்தில் இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அநேகமாக மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x