Published : 14 Sep 2017 04:39 PM
Last Updated : 14 Sep 2017 04:39 PM

பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி

தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்கோப்பையில் தோனி ஆடும் சாத்தியங்களை உறுதி செய்தார்.

“அணியில் உடற்தகுதியில் மிகச்சிறந்த வீரர் தோனி. ஒருநாள் கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரை உலகில் சிறந்த விக்கெட் கீப்பர் தோனிதான், பேட்டிங்கில் இந்தத் தொடரில் சில ஆச்சரியங்களை அவர் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். நீங்கள் பாருங்கள், என்னுடைய உள்ளுணர்வு என்னவெனில் தோனி மூலம் ஏதோவொன்று நடக்கப்போகிறது. இலங்கையில் ஆடியது ட்ரெய்லர்தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது அவருக்குச் சிறப்பாக உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக அனைத்து வடிவங்களிலும் நீண்ட காலம் ஆடுவது கடினம்.

அஸ்வின், ஜடேஜா நீக்கம் பற்றி...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 25 டெஸ்ட் போட்டிகள் ஆடப்படவுள்ளன. அதே அளவுக்கு ஒருநாள், டி20 போட்டிகளும் உள்ளன. உலகின் நம்பர் 1, நம்பர் 2 பவுலர்கள் அஸ்வினும் ஜடேஜாவும் (அதாவது 3 மற்றும் 2-வது இடம்) எனவே அளவுக்கதிகமான டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் அனைத்து வடிவங்களிலும் ஆடுவது அவர்களைக் களைப்படையச் செய்யும்.

உலகக்கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன, போதுமான கால அவகாசம் உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களால் அனைத்திலும் ஆட முடியும். ஆனால் எவ்வளவு ஒரு வீரரை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளது. அணி நிர்வாகம்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்க தொடர் 2 மாதங்கள், இங்கிலாந்து இரண்டரை மாத தொடர், ஆஸ்திரேலியாவிலும் இரண்டரை மாதத் தொடர் எனவே பவுலர்கள் காயமோ, களைப்போ அடைந்து விடலாகாது. அணித்தேர்வுக்கொள்கை பாராட்டுக்குரியது, நிறைய வீரர்களை ஒருநாள் போட்டிகளில் முயற்சி செய்வோம், பிறகு உலகக்கோப்பை வருவதற்கு 6-7 மாதங்களுக்கு முன்பாக 17-18 வீரர்கள் நம்மிடம் தயாராக இருப்பார்கள். அது நடப்புப் பார்மைப் பொறுத்ததே. அப்போது பார்மும் மிக முக்கியம். மேலும் உடற்தகுதியும் உள்ளது.

இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x