Published : 13 Sep 2017 09:58 AM
Last Updated : 13 Sep 2017 09:58 AM

அயர்லாந்துடன் இன்று மோதல்:புத்துயிர் பெறுமா மே.இ.தீவுகள் அணி; மீண்டும் களமிறங்குகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில்

அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களம் இறங்குகிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத நிலையிலும், வலுவான இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதை கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று விளையாடுகிறது. இப்போட்டியில் கிறிஸ் கெயில், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகிய நட்சத்திர வீரர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அந்த அணியைப் பொறுத்தவரை உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் மட்டுமே, சர்வதேச போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்கச் செல்வதால் உள்ளூர் தொடர்களை நட்சத்திர வீரர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு வழங்கியதால், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இன்றைய ஆட்டத்தில் கிறிஸ் கெயில் விளையாடுகிறார்.

கிறிஸ் கெயிலைப் போலவே சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரும் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களின் வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுக்குழு தலைவர் கோர்ட்னி பிரவுனி கூறும்போது, “கிறிஸ் கெயில், சாமுவேல்ஸ் ஆகிய இருவரையும் மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். அவர்களின் வருகை அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். மற்ற வீரர்களுக்கும் அவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும்” என்றார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்றால்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கிறிஸ் கெயில் அணியில் இருப்பது, உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெற உதவியாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

மாறாக இந்தத் போட்டிகளில் தேவையான அளவுக்கு வெற்றிகளைக் குவிக்காவிட்டால், வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டியில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த அணி ஆட நேரிடும். இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இந்தத் தொடரில் ஆடுவது பற்றி கிறிஸ் கெயில் கூறும்போது, “நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆடுவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆட விரும்புகிறேன். கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து வருகின்றன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்கிடையே இன்றைய போட்டியின்போது மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x