Published : 08 Sep 2017 03:25 PM
Last Updated : 08 Sep 2017 03:25 PM

சிறையில் முதல் நாள் இரவே தூக்கில் தொங்க எண்ணினேன்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் லூயிஸ் உருக்கம்

போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் லூயிஸ் சிறையில் தான் முதல்நாள் இரவிலேயே படுக்கை விரிப்பு மூலம் தூக்கில் தொங்க எண்ணியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2008-ல் கிறிஸ் லூயிஸ் செயிண்ட் லூசியாவிலிருந்து விமானத்தில் திரும்பி வந்த போது காத்விக் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இவர் கொண்டு வந்த பழச்சாறு நிரம்பிய 5 புட்டிகளில் கொகெய்ன் என்ற போதை மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். மேலும் லூயிஸின் லக்கேஜில் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் தான் கஞ்சா பிடிப்பேன் என்று அவர் விசாரணையில் தெரிவித்தார். இதனையடுத்து நடந்த வழக்கு விசாரணையில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கிறிஸ் லூயிஸ் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இவருடன் வந்த நண்பரும் கூடைப்பந்து வீரருமான சத் கிர்னன், தனக்கு 100,000 பவுண்டுகள் கொடுத்தால் தான் பழியை ஏற்று லூயிஸை விடுவிக்கச் செய்வதாக லூயிஸிடம் தெரிவித்தார். ஆனால் இருவருக்கும் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது கோர்ட். ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்தார், அந்நாட்டுச் சட்டப்படி பாதி ஆண்டுகள் தண்டனை அனுபவித்தால் போதுமானது.

இத்தனைக்கும் லூயிசிடம் அனைவரும் எச்சரிக்கை செய்திருந்தனர், அப்படியிருந்தும் தெரியாமல் சிக்கவைக்கப்பட்ட குற்றச்சாட்டில் அவர் வாழ்நாளில் தான் நினைத்துக் கூட பார்க்காத சிறைத்தண்டனையைப் பெற்றார்.

தற்போது Crazy: My Road to Redemption என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். செயிண்ட் லூசியாவிலிருந்து பிரிட்டனுக்கு கொகெய்னைக் கடத்த 50,000 பவுண்டுகள் பெற ஒப்புக்கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு, ஆனால் இந்தத் தொகை இவருக்கு வரவேயில்லை.

“அப்போது நான் நினைத்ததெல்லாம் பணம் இல்லாமல் போனால் என்ன செய்வது? அப்போது நான் ஒன்றை நினைத்தேன், ஒரு முறை ஒரேயொரு முறை கொஞ்சம் பணம் பார்த்து விட்டால் கொஞ்சம் நிம்மதி பிறக்கும் என்று நினைத்தேன்” என்றார்.

காத்விக் விமானநிலையத்தில் பிடிபட்டார். தான் குற்றவாளி இல்லை என்றார், “சிறைக்குச் செல்லும் எண்ணமே என்னை அச்சுறுத்தியது”, சிறையில் அடைக்கப்பட்டு முதல் நாள் இரவு படுக்கை விரிப்புகள் மூலம் தூக்கில் தொங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது” என்று இப்போது எழுதியுள்ளார். மேலும் ஒரு கிரிக்கெட் வீரனாக இந்த நாடு என்னை நினைவில் கொள்வது போக, ‘போதை மருந்து கடத்தல் குற்றவாளி’ என்று என்னைப் பார்ப்பார்கள், இது எனக்கு பயமூட்டுகிறது.

ஆனால், “இதுதான் உண்மை, நான் அவமானப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர், இதனை நான் மறுப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் இப்படி என்னை இந்தத் தேசம் நினைவில் வைத்துக் கொள்வதை நான் வெறுக்கிறேன். இதற்காக வருந்திப்பயனில்லை, என்னுடைய செயலின் விளைவுகள்தானே இவை. நான் என் தெரிவுகளை யோசிக்க வேண்டும், பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் கிறிஸ் லூயிஸ்.

‘என் இனத்தவர் மீது தீராப் பழியை ஏற்படுத்தி விட்டேன்’

கறுப்பர்கள் மீதான ஒரு நிலைத்த எதிர்மறைப் படிமத்தை ஏற்படுத்தும் சொல்லாடல்களுக்கு எதிராக நான் போராடினேன். உள் நகரங்களிலிருந்து வரும் இளம் கருப்பர்கள் கடத்தல், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்ற நிலைத்த எதிர்மறைப்படிமம் இருந்தது, அது மிகப்பெரிய தவறு என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் நானே போதை மருந்துக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி குற்றவாளியாகி சிறை சென்று வந்துள்ளேன், இதன் மூலம் என் குடும்பம், என் இனம், என் சமூகத்தினருக்கு இழிவு தேடித்தந்து விட்டேன்.

இதன் தாக்கம் பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு கருப்பரையும் பாதிக்கும். நான் இவர்கள் அனைவரையும் இழிவுக்கு இட்டுச் சென்று விட்டேன். நான் இதனை தோளைக் குலுக்கி ஒன்றுமில்லை என்று கூற முடியாது. நான் செய்தது என் வாழ்க்கைக்கு ஏறபடுத்திய சேதம் என்ற அளவில் மட்டும் நான் அதைப் பார்க்கவில்லை, என் சமூகம் என் இனத்துக்கு சேதம் விளைவித்துள்ளேன்.

இனி மற்றவர்கள் இதே தவறைச் செய்ய விடாமல் நான் தடுக்க வேண்டும். நமக்கு இது நடக்காது என்று நினைக்கலாம், ஆனால் அப்படியல்ல.

உண்மையான கிறிஸ் லூயிஸ் யார் என்ற கேள்விக்கு விடை என்னுடைய இனி வரும் நடவடிக்கைகளே. வார்த்தைகள் அல்ல. என் சமூகத்துக்கு என் இனத்துக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். இனி அதன் மதிப்பைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட மாட்டேன்.

இவ்வாறு கூறியுள்ளார் கிறிஸ் லூயிஸ்.

32 டெஸ்ட் போட்டிகளில் 93 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கிறிஸ் லூயிஸ் 1105 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும் அதுவும் இந்தச் சதம் இந்திய அணிக்கு எதிராக சென்னையில் குழிப்பிட்சில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜு, ராஜேஷ் சவுகான், கபில், பிரபாகர் ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்டது. 140 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 117 ரன்களை எடுத்தார் கிறிஸ் லூயிஸ்.

53 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் 374 ரன்களையும் எடுத்துள்ளார் கிறிஸ் லூயிஸ். முதல் தர கிரிக்கெட்டில் 189 போட்டிகளில் 543 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் தன் உச்சமான பார்மில் இருந்த போது மிடில் ஸ்டம்பில் பிட்ச் செய்த லெக் கட்டரில் பவுல்டு செய்தது மறக்க முடியாததாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x