Last Updated : 02 Sep, 2017 03:16 PM

 

Published : 02 Sep 2017 03:16 PM
Last Updated : 02 Sep 2017 03:16 PM

தோனி இன்னும் பாதி கூட முடிந்து விடவில்லை: விமர்சகர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

2019 உலகக்கோப்பைக்கான தயாரிப்பு, அணிச்சேர்க்கை ஆகியவை பற்றி அணித்தேர்வுக்குழுவினர் பல விஷயங்களை பரிசீலித்து வரும் நிலையில் தோனியின் இடம் குறித்து மீண்டும் மீண்டும் சில தரப்புகள் கேள்வி எழுப்ப, ரவிசாஸ்திரி அந்த முன்முடிபுகளை தகர்த்தார்.

இது குறித்து ரவிசாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்ததாவது:

அணியில் தோனியின் தாக்கம், செல்வாக்கு மிகப்பெரியது. ஓய்வறையில் அவர் ‘லிவிங் லெஜண்ட்’ என்று பார்க்கப்படுகிறார். கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு ஆபரணம். அவர் முடிந்து விட்டார் என்று கூறுவது தவறு, அவர் இன்னும் பாதிகூட முடிந்து விடவில்லை என்பதே என் கருத்து.

இப்படி யாராவது நினைத்தால் அது மிகவும் தவறாகும். அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவே அர்த்தம்.

வீரர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இவர்கள் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது? ஒருநாள் கிரிக்கெட்டில் நாட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி. அவரது பேட்டிங் சராசரியையும் குறை கூற முடியாது, இன்னும் என்னதான் வேண்டும்? அவர் நீண்ட ஆண்டுகாலம் விளையாடி விட்டார் என்பதற்காகவே அவருக்கு மாற்று வீரர் தேவை என்று நினைக்கிறீர்கள் இல்லையா?

தோனி சிறப்பாகவே பங்களித்து வருகிறார். சுனில் கவாஸ்கரையும் சச்சின் டெண்டுல்கரையும் அவர்களுக்கு வயது 36 ஆகிவிட்டது என்று ஒதுக்கி விட முடியுமா? எனவே தோனி பற்றி இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது எது?

2019 உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும், இப்போதைக்கு நாங்கள் ஒரு சமயத்தில் ஒரே தொடரில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

இன்றைய கிரிக்கெட் அணிகளைப் பாருங்கள், ஒரு அணி கூட அயல்நாடுகளில் சென்று சிறப்பாக ஆடுவதில்லை. ஒரு அணி கூட இல்லை. ஆனால் இப்போது இந்தியா அந்தவகையான அணியாக உள்ளது. நாம் இதனை ஏற்கெனவே சிறுகச் சிறுகச் செய்து வருகிறோம்.

கடந்த 3 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள், இங்கிலாந்தில் 2014-ல் ஒருநாள் தொடரை வென்றோம். ஆஸ்திரேலியாவை டி20-யில் ஒயிட்வாஷ் செய்தோம். ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு வடிவத்திலும் இதனைச் சாதித்த அணியை நான் இன்னும் பார்க்கவில்லை. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையை வென்றோம். எனவே அயல்நாடுகளில் இந்த இளம் இந்திய அணி நிறைய என்பதைச் சாதித்து விட்டது.

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஏன் பவுலர்கள் மட்டும் ஆட வேண்டும்? விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா, மற்றும் பிறரும் கூட ஆடலாம், நான் இதற்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x