Published : 25 Aug 2017 11:06 AM
Last Updated : 25 Aug 2017 11:06 AM

தனஞ்ஜயா புதிர் ஸ்பின்னில் திகைத்த இந்திய அணி: புவனேஷ், தோனி சாதனைக் கூட்டணியால் வெற்றி

பல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தனது ஸ்பின் வித்தைகளினால் இந்திய ஸ்டார்களைத் திகைக்க வைத்தார் தனஞ்ஜயா. ஆனால் தோனி, புவனேஷ் குமார் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு என்பது மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 231 ரன்கள் என்று நிர்ணையிக்கப்பட்டது.

231 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி, வழக்கம் போல் தொடக்கத்தில் அசத்தியது ரோஹித் சர்மா (54), ஷிகர் தவண் (49) இணைந்து ரன்கள் 109 ரன்கள் என்ற தொடக்கத்தைக் கொடுத்தனர். 109/0 என்ற நிலையிலிருந்து இந்திய அணி 131/7 என்று சரிவு கண்டது, காரணம் இலங்கையின் 23 வயது இளம் ஸ்பின்னர் தனஞ்ஜயா அபாரமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே. 131/7 என்ற நிலையிலிருந்து தோனி 68 பந்துகளில் 45 ரன்களையும் (ஒரேயொரு பவுண்டரி), புவனேஷ் குமார் 80 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 53 ரன்களையும் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 44.2 ஓவர்களில் இந்திய அணி 231/7 என்று வெற்றி பெற்றது.

தனஞ்ஜயா இலங்கையின் இன்னொரு புதிர் ஸ்பின்னர். இவர் லெக்பிரேக், கூக்ளி, கேரம் பால், தூஸ்ரா, சில அரிய தருணங்களில் ஆஃப் ஸ்பின் என்று தன் கையில் பல வித்தைகளை வைத்திருக்கும் சகலகலா வல்லவர். அஜந்தா மெண்டிஸ் போல் இன்னொரு திறமை. இவர் இந்திய ‘சூப்பர்ஸ்டார்களை’ நேற்று உண்மையில் திகைக்கவைத்தார் என்றே கூற வேண்டும்.

54 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியும் புவனேஷ் குமாரையும், தோனியையும் வீழ்த்தி இலங்கையை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்பதால் தனஞ்ஜயா மனதுடைந்து போனார். காரணம் இவரிடம் காணப்படும் திறமை அபாரமானது, பல விதமான பந்துகளை வீசி திகைக்க வைத்தார், ஜாதவ், கோலி, ராகுல், பாண்டியா, ரோஹித் சர்மா என்று அனைவரும் இவர் என்ன வீசுகிறார் என்று ஆச்சரியமடைந்தனர்.

தோனியும், புவனேஷ் குமாரும் 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 100 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆகச்சிறந்த 8-வது விக்கெட் கூட்டணியாகும். அதே போல் வெற்றிபெற்ற விரட்டலில் 8வது விக்கெட்டுக்காக இதுவே சிறந்த ரன் கூட்டணியாகும்.

முதலில் ரோஹித் சர்மா இவர் 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த போது மிடில் அண்ட் லெக் தனஞ்ஜயா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். போகிற போக்கில் ரிவியூ ஒன்றையும் விரயம் செய்தார்.

ஷிகர் தவணும் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து சிறிவதனாவின் விட்டிருந்தால் வைடு பந்தை ஸ்வீப் செய்து ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேதார் ஜாதவ் 1 ரன்னில் தனஞ்ஜயாவின் கூக்ளிக்கு பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்பின்னர் கூக்ளி வீசுவார் என்று ஜாதவ் முற்றிலும் எதிர்பார்க்காமல் திகைப்படைந்தார். இதே ஓவரில் விராட் கோலி 4 ரன்களில் மீண்டும் கூக்ளி, பந்து வந்த லைனிலிருந்து தன் கால்காப்பை அகற்றிய விராட் கோலி தனது ராஜ கவர்டிரைவுக்கு முயன்றார், ஆனால் இம்முறை பேட்டுக்கும் பேடுக்கும் இடையே பந்து புகுந்து ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

கே.எல்.ராகுலும் கூக்ளியில் அதிர்ச்சியடைந்தார். பந்து உள்ளே நன்றாகத் திரும்பி பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ராகுல் 4 ரன்களில் வெளியேற 15 பந்துகளில் தனஞ்ஜய 5 விக்கெட்டுகள்.

நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா ஸ்கோரர்களைத் தொந்தரவு செய்யாமல் தனஞ்ஜயாவின் இன்னொரு கூக்ளியில் மேலேறி வந்து ஆடி ஸ்டம்ப்டு ஆனார். அக்சர் படேல் 6 ரன்களில் தனஞ்ஜயாவின் திருப்பாமல் நேரே வீசப்பட்ட பந்துக்கு பீட் ஆகி எல்.பி.ஆனார்.

இந்திய அணி 131/7 என்று தடுமாறியது.

இந்நிலையில்தான் தோனி, புவனேஷ் குமார் உறுதிப்பாட்டுடன் களமிறங்கினர், தோனியின் வழிகாட்டுதலில் புவனேஷ் குமார் சிறப்பாக ஆடினார்.

2011-ல் முரளிதரனுக்கு தோனி இதே போல் வெற்றி ஒன்றை மறுத்தார், நேற்று இளம் தனஞ்ஜயாவுக்கும் இதையே செய்தார். 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் நாட் அவுட், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் தன் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெற்றியே இறுதி இலக்கு என்பது போல் பொறுமையுடனும் உறுதியுடனும் ஆடினார் தோனி. ஆனால் ஒருமுறை அதிர்ஷ்டம் இவருக்குக் கைகொடுத்தது. விஸ்வா பெர்னாண்டோ பந்து ஒன்று தோனியின் கால்களுக்கு இடையே சென்று ஸ்டம்பை உரசினாலும் பைல் கீழே விழவில்லை.

புவனேஷ் குமார் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் மூலம் இலக்கை 50 ரன்களுக்குக் குறைத்து பிறகு அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் மூலம் இலக்கை 30 ரன்களுக்குக் கொண்டு வந்தார். கடைசியில் இலங்கை தனது 800-வது ஒருநாள் போட்டியில் போராடி தோல்வி தழுவியது.

ஆனாலும் தனஞ்ஜயாவின் வித்தைகளுக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x