Published : 24 Aug 2017 06:44 PM
Last Updated : 24 Aug 2017 06:44 PM

பும்ரா அபாரப் பந்து வீச்சு: இலங்கை அணி 236 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது

பல்லகிலே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்த இந்திய அணி அந்த அணியை 50 ஓவர்களில் 236/8 என்று மட்டுப்படுத்தியது.

ஜஸ்பிரீத் பும்ரா 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, லெக்ஸ்பின்னர் சாஹல் 2 விக்கெட்டுகளையும் பாண்டியா 1 விக்கெட்டையும், மீண்டும் அபாரமாக வீசிய அக்சர் படேல் 30 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆனால் இலங்கை அணிக்கு புதிய தெம்பூட்டியவர் சிறிவதனா, இவர் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தார். இவர் ஆடிய விதம் மற்ற பேட்ஸ்மென்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

இம்முறையும் இலங்கை 14 ஓவர்களில் 70/1 என்ற நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் வழக்கம் போல் 29-வது ஓவரில் 121/5 என்று சரிவு கண்டது. அந்நிலையில்தான் சிறிவதனா சர்வதேசப் போட்டிக்குத் தேவையான அணுகுமுறையைக் கையாண்டார், இவர் எடுத்த அரைசதம்தான் இலங்கை அணியை 236 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

பிட்சிலும் ஒன்றுமில்லை, பந்து வீச்சும் சாதாரணமாகவே இருந்தது, ஒரு நல்ல லைன்-அப் உள்ள அணி நிச்சயம் பெரிய ரன் எண்ணிக்கையை எட்டியிருக்கக் கூடும்.

டிக்வெல்லா அருமையாக ஆடி 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்தார், புவனேஷ் குமாரை பிளிக் ஷாட்டில் மிட் ஆனில் அடித்த ஷாட் அருமையானது. அவர் கிரீசில் நகர்ந்து நகர்ந்து ஆடியபடியால் இந்திய அணி கொஞ்சம் சிரமத்தை எதிர்கொண்டது, ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக அவருக்கு வேகம் குறைந்த பந்துகளை வீசினார், இதில் ஒரு பந்தை அவர் மிஸ்ஹிட் செய்ய அது ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.

சங்கக்காரா ஸ்டம்பிங் சாதனையை தோனி சமன்:

தனுஷ்க குணதிலகாவும் 2 அருமையான பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தவறாக சாஹல் பந்துக்கு மேலேறி வந்து தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

தோனி இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங்குகளுடன் சங்கக்காரா சாதனையைச் சமன் செய்துள்ளார். ஆனால் சங்கக்காரா 404 ஒருநாள் போட்டிகளில் இதனைச் சாதிக்க, தோனியோ 298 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இருவருக்கும் பின்னால் ரொமேஷ் கலுவிதரனா (75) உள்ளார்.

மெண்டிஸ் 48 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து சாஹலிடம் எல்.பி.ஆனார். மேத்யூஸ் 20 ரன்களில் படேல் பந்தில் அதே முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இருகருமே நேராக வந்த ஃபுல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று தவறான ஷாட் தேர்வுக்கு பலியாயினர்.

உபுல் தரங்கா 9 ரன்களில் பாண்டியாவிடம் அவுட் ஆகி வெளியேறினார். பாண்டியா முழங்கால் காயம் காரணமாக தொடர்து வீச முடியவில்லை.

அருமையாக ஆடிய சிறிவதனாவையும், கபுகேதராவையும், தனஞ்ஜயாவையும் பும்ரா காலி செய்தார். இடையில் படேல், சாஹல் இணைந்து 20 ஓவர்களில் 73 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். இதில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கையை முடக்கினர். அந்த அணி 236 ரன்கள் எடுக்க சிறிவதனாவின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x