Published : 24 Aug 2017 11:31 AM
Last Updated : 24 Aug 2017 11:31 AM

கெய்ல் அதிரடியை பின்னுக்குத் தள்ளிய மெக்கல்லம்-பிராவோ காட்டடி: கரிபியன் கிரிக்கெட்டில் ருசிகரம்

பாசட்டெரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் செயிண்ட் கிட்ஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அதிரடியை எதிரணியான டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் மெக்கல்லம், டேரன் பிராவோ ஆகியோர் முறியடிக்கும் விதத்தில் காட்டடி தர்பாரில் ஈடுபட்டனர்.

முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 93 ரன்களை விளாசித் தள்ளினார். எவின் லூயிஸ் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இலக்கு மாற்றியமைக்கப்பட 5.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது, 6 ஒவர்களாக குறைக்கப்பட்ட போதும் 4 பந்துகள் மிச்சம் வைத்து வென்றது டிரிபாங்கோ.

மெக்கல்லம் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 40 ரன்களையும், டேரன் பிராவோ 10 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 38 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

கடைசி 13 பந்துகளில் 8 சிக்சர்களை விளாசினர் மெக்கல்லம்-டேரன் பிராவோ ஜோடியினர். இந்த அதிரடியில் கெய்ல் அணியான செயிண்ட் கிட்ஸ் வாயடைத்துப் போனது. இந்தவெற்றியை அடுத்து முதலிடம் பிடிப்பதில் நைட் ரைடர்ஸ் அணியின் வாய்ப்பு கூடியுள்ளது..

இலக்கை விரட்டும் போது கோலின் மன்ரோ 4-வது ஓவரில் வீழ்ந்தார், பிறகு 6 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் 17 பந்துகளில் 52 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தான் 4 பந்துகள் மீதம் வைத்து விளாசினர் மெக்கல்லம், பிராவோ ஜோடி.

முன்னதாக கெய்ல் பேட் செய்த போது அவர் 19 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த நிலையில் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 90 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கிறிஸ் கெய்ல் அதன் பிறகு பேயாட்டம் ஆடினார், ஆஷ்லி நர்ஸ், டிவைன் பிராவோ, ரான்ஸ்போர்ட் பியாட்டன் ஆகியோரை தொடர்ச்சியாக சிக்சர்களை அடித்தார். அரைசதத்தை 34 பந்துகளில் எட்டினார், அடுத்த 12 பந்துகளில் 93 ரன்களுக்கு மளமளவென உயர்ந்தார். கடைசி 3 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்தால் கெய்ல் சதம் எட்டியிருப்பார், ஆனால் மோசமான பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கெய்ல்.

இலக்கைத் துரத்தும் போது பென் ஹில்பென்ஹாஸ் வீசிய முதல் ஓவரில் நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்களையே எடுக்க முடிந்தது. ஆனால் அதன் பிறகு மெக்கல்லம் ஆட்டம் சூடுபிடித்தது. கார்லோஸ் பிராத்வெய்ட் ஓவரில் 1 சிக்ஸ் 2 பவுண்டரிகள் பிறகு ஹில்பென்ஹாஸ் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் என்று மெக்கல்லம் சூடானார். இதற்கிடையே நரைன், மன்ரோ ஆகியோர் 4 பந்து இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 3.1 ஓவர்களில் 34/2 என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. மழை முடிந்த பிறகு 6 ஒவர்களில் 82 என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. டேரன் பிராவோ பத்ரீயை 3 சிக்சர்களுடன் தொடங்கினார். அதிலிருந்து நைட் ரைடர்ஸ் வீரர்களான மெக்கல்லம், பிராவோ திரும்பிப் பார்க்கவில்லை.

ஆட்ட நாயகனாக டேரன் பிராவோ தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x