Published : 20 Aug 2017 11:30 AM
Last Updated : 20 Aug 2017 11:30 AM

டிஎன்பிஎல் 2-வது சீசன் இறுதிப் போட்டி: பட்டம் வெல்லும் முனைப்பில் தூத்துக்குடி - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

டிஎன்பிஎல் 2-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி எதிர்த்து விளையாடுகிறது.

டூட்டி பேட்ரியாட்ஸ் அணி இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராக அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். பேட்டிங்கில் 445 ரன்கள் குவித்துள்ள அவர், பந்து வீச்சில் 14 விக்கெட்களையும் வேட்டையாடி உள்ளார்.

பேட்டிங்கில் அவருக்கு உறுதுணையாக கவுசிக் காந்தி உள்ளார். அவர், இந்த சீசனில் 273 ரன்கள் சேர்த்துள்ளார். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் ஆகியோர் அணியில் இருப்பது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இளம் வீரர்களான எஸ்.பி.நாதன், ஆகாஷ் சும்ரா ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

பந்து வீச்சிலும் அணி வலுவாகவே திகழ்கிறது. அதிசயராஜ் டேவிட்சன் 13 விக்கெட்களும், அவுஷிக் ஸ்ரீனிவாஸ் 8 விக்கெட்களும் இந்த சீசனில் கைப்பற்றி உள்ளனர். அஸ்வின் கிறிஸ்ட் சிக்கனமாக ரன் கொடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பவராக திகழ்கிறார்.

சேப்பாக் அணி, டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக இதுவரை வெற்றி பெற்றது இல்லை. கடந்த ஆண்டு இறுதிப் போட்டி உட்பட இரண்டு ஆட்டத்திலும், இந்த சீசனில் லீக் மற்றும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியிடம் சேப்பாக் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விகளுக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க சேப்பாக் அணி முயற்சி செய்யக்கூடும்.

வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசுவதில் சேப்பாக் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. கேப்டன் சதீஸ், சாய் கிஷோர், அலெக்சாண்டர், அருண் குமார் ஆகியோர் துல்லியமாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். இவர்களில் சாய் கிஷோர், இந்த சீசனில் 15 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சேப்பாக் அணியின் பேட்டிங் தலைவன் சற்குணம், கே.எச். கோபிநாத் ஆகியோரை நம்பியே உள்ளது. இவர்களுடன் அந்தோனி தாஸ், எஸ்.கார்த்திக், சரவணன், சசிதேவ், சதீஸ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்தால் வலுவான இலக்கை கொடுக்க முயற்சி செய்யலாம் அல்லது கடின இலக்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x