Published : 17 Aug 2017 02:41 PM
Last Updated : 17 Aug 2017 02:41 PM

தன் மீது மோசமான வசைமொழியை பிரயோகித்ததாக ஆர்தர் மீது உமர் அக்மல் ஆவேசம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ‘வேண்டா மருமகள்’ ஆகிவிட்ட உமர் அக்மல், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான மொழியில் வசைமாரி பொழிந்ததாகவும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக உமர் அக்மலின் எழுச்சியைக் கண்டித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய உயர் ஆட்டத்திறன் முகாமில் உமர் அக்மல் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டுள்ளதால் விலக்கு வேண்டும் என்று உமர் அக்மல் கேட்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை இத்தகவலை அவர் பயிற்சியாளர் முஷ்டாக் அகமதுவிடம் கூறிவிட்டார். இந்தக் காலக்கட்டத்தை தன் மறுவாழ்வு சிகிச்சையை இங்கிலாந்தில் உள்ள பயிற்சியாளரிடம் பெற்றார். எதிர்பார்த்ததைவிட சீக்கிரம் வந்தாலும் முகாம் முடிந்து விட்டிருந்தது.

“நான் மறுசீரமைப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சிக்காக சென்றிருந்தேன். ஆனால் பயிற்சியாளர்கள் யாரும் என் கூட இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை. ஏன் அனைத்து சர்வதேச பயிற்சியாளர்களும் என்னுடன் பணியாற்ற மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு, ‘மைய ஒப்பந்தம் பெற்ற வீரர்களுடன் பணியற்ற முடியும்’ என்றனர்.

நானும் பாகிஸ்தான் அணியின் சர்வதேச வீரர்தான், என் உடல்தகுதி பிரச்சினைதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவர்கள்தானே உதவ வேண்டும்? நான் அணித்தேர்வுக்குழு தலைவர் இன்சமாமை அணுகினேன், அவர் மிக்கி ஆர்தரைக் கை காட்டினார். ஆர்தர் என்னை இன்சமாம் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அதுவும் இன்சமாம் முன்னிலையிலேயே, இது கீழ்த்தரமான செயல், இதனால் என் மனம் புண்பட்டது.

என் உடல் தகுதி தேவைக்கான நிலையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதைத்தான் சரி செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு உதவ மறுத்ததோடு, தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு என்னை வரச்சொன்னது யார் என்று கேட்கிறார் மிக்கி ஆர்தர். தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு வரக்கூடாது என்றும் கிளப் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.

அவர் என் மீது வசைமாரி பொழியக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு சமமானது இது. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது திட்டிக்கொண்டுதான் இருப்பார். எனவே நான் இதனை பொதுவெளியில் கொண்டு வந்தேன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இதனைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.

எப்போதும் பயிற்சியாளர் யாராவது ஒரு வீரரைத் திட்டிக் கொண்டேயிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு பாகிஸ்தானியாக என்னால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.

அகாதமிகள் ஒருவரது தவறைத் திருத்திக் கொள்ளத்தான் இருக்கிறது. என்னிடமிருந்து அனைத்தையும் பறித்து விட்டனர். நான் ஒரு பாகிஸ்தான் வீரர், எனது தவறைத் திருத்திக் கொள்ள விரும்புகிறேன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே கூறுங்கள்” என்றார்.

மிக்கி ஆர்தரும் நடந்த உரையாடல் பற்றி கூறும்போது, “நான் அவரிடம் சில உண்மைகளைக் கூறினேன். அவர் தன் முதுகில் உள்ள அழுக்கைப் பார்க்காமல் எப்போதும் சாக்கு போக்குகளையே கூறிவருகிறார். அவர் ஒப்பந்த வீரர் அல்ல, எனவே அவர் தன் இஷ்டத்துக்கு இங்கு வந்து தனக்குத் தேவையானதை உத்தரவிட முடியாது” என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகே ஆர்தரின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலைமையில், உமர் அக்மலின் வேதனை சுவற்றுக்கு முன்னால் புலம்புவது போல்தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x