Published : 14 Aug 2017 07:59 PM
Last Updated : 14 Aug 2017 07:59 PM

இந்த வெற்றி, அணியின் உண்மையான வலுவை பிரதிபலிக்கிறதா? - அப்படியல்ல என்கிறார் கோலி

இலங்கை அணியை அதன் மண்ணில் ஒயிட்வாஷ் செய்ததையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் வலு, பந்து வீச்சு, பேட்டிங் என்று அனைத்தைப் பற்றியும் விராட் கோலி விரிவாகப் பேட்டியளித்தார்.

அதன் ஒருசில பகுதிகள் இதோ:

இந்த வெற்றி இந்திய அணி எவ்வளவு வலுவுடன் உள்ளது என்பதை பிரதிபலிக்கிறதா?

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடினோம். அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் வென்றோம். பிட்சின் தன்மையும் ஒரு பெரிய காரணி என்பதையும் மறக்கலாகாது. 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றிருந்தால் நிச்சயம் நாம் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்போம். எனவே இத்தகைய விஷயங்களையும் கணக்கில் எடுத்து கொண்டு பெரிய பின்புலத்தில் இதனை யோசிக்க வேண்டும். இப்படிப்பார்க்கும் போது 3-0 என்று வெற்றி பெற நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினோம் என்பதே முக்கியம். எதிரணியின் மீது சீராக அழுத்தத்தைச் செலுத்தினோம், இந்த்த் தொடரில் பெரும்பாலான செஷன்களில் ஆதிக்கம் செலுத்தினோம். இதுதான் க்ளீன் ஸ்வீப்புக்கு இட்டுச் சென்றது. இது ஒரு அணியாக எங்களுக்கு நிறைய பெருமை சேர்க்கிறது.

ஹர்திக் பாண்டியா இன்னிங்ஸ் பற்றி...

ஹர்திக் பாண்டியா ஆடிய இன்னிங்ஸ் எதிரணியினரின் மனநிலையை மாற்றியது, அவர்கள் 100 ரன்கள் அதிகம் கொடுத்து விட்டோம் என்று கூடுதல் அழுத்தத்தே ஏற்றிக் கொள்ள ஹர்திக் பாண்டியா வித்திட்டார். 320/6 என்ற நிலையிலிருந்து 487 ரன்கள் என்பது எதிரணியினரின் மனநிலையில் ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பாண்டியா பற்றி வேறு எதுவும் நான் புதிதாகக் கூற விரும்பவில்லை. அவரது ஆட்டம் அவரைப்பற்றி அதிகம் பறைசாற்றுகிறது. வெளியில் அவர் எப்படிப்பார்க்கப்படுகிறார் என்பதில் பிரச்சினையில்லை, ஆனால் அணியாக அவர் மீது எங்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர் சுதந்திரமாக தன்னை பேட்டிங்கில், களத்தில் வெளிப்படுத்திக் கொள்ளட்டும். நம்பர் 8-ல் இறங்கி முதல் 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம், ஒரு அதிரடி சதம் என்பது அவரிடம் சிறப்பான திறமை இருப்பதையே அறிவுறுத்துகிறது. அவர் கண்டபடி மட்டையை சுழற்றவில்லை. அவர் மூளையைப் பயன்படுத்தி ஆடினார், அதுவும் பின்கள வீரர்களுடன் ஆடியது என்பது மிகமிக நல்ல அறிகுறி. அவர் அணியில் சமச்சீர் நிலையைக் கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு துல்லியமான பீல்டர், பவுலிங்கில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார். பேட்டிங்கில் அவரால் என்ன முடியும் என்பதைப் பார்த்தோம். வெளியிலிருந்து எழும் ஐயங்களை விடுவோம் எங்கள் மத்தியில் அவரிடம் 120% நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர் பற்றி...

இந்தத் தொடர்கள் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதில் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை. எந்த அணிக்கு உத்வேகம் இருக்கிறதோ அது வெற்றி பெறும். இரு அணிகளுமே சிறந்த கிரிக்கெட்டை ஆடும் போது அது விறுவிறுப்பான தொடராக மாறுகிறது. தென் ஆப்பிரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் 4 மாதங்களாக இங்கிலாந்தில் உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து அங்குதான் உள்ளனர், இது அவர்கள் மனதில் நிலைத்திருந்ததாக அவர்களே கூறியுள்ளனர். எனவே இத்தகைய விஷயங்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x