Published : 14 Aug 2017 04:27 PM
Last Updated : 14 Aug 2017 04:27 PM

இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

பல்லகிலேயில் நடைபெற்ற 3வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய, இந்திய அணி முதல் முறையாக அயல்நாட்டுத் தொடரில் 3-0 என்று எதிரணியினரை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் நியூஸிலாந்தில் 1967-68 தொடரில் இந்திய அணி நியூஸிலாந்தை, நியூஸியில் 3-1 என்று வெற்றி பெற்றபோது ஒரு தொடரில் 3 டெஸ்ட்களை வென்றிருந்தது, இது 2-ம் முறை ஆனால் இது ஒயிட்வாஷ் என்பது சாதனையாகும்.

முதல் இன்னிங்சில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தது. மொகமது ஷமி, அஸ்வின் ஆகியோரது உயர்தரப் பந்து வீச்சினால் இலங்கை அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது.

திமுத் கருணரத்னே இன்று முதல் விக்கெட்டாக வெளியேறினார். 3-வது ஓவரை அஸ்வின் வீச ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் நல்ல அளவில் பிட்ச் ஆகி சற்றே எழும்பியது, கிரீசில் ஒட்டிக் கொண்டிருந்த கருணரத்னே காலை நகர்த்தாமல் தன்பாட்டுக்குச் சென்ற பந்தைப் போய் இடித்தார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

முன்னணி பேட்ஸ்மென்களே ஆட முடியாமல் திணறி வரும் நிலையில் இரவுக்காவலன், பவுலர் புஷ்பகுமாரா என்ன செய்ய முடியும்? ஷமி அவரைப் பாடாய்ப்படுத்தினார். கடைசியில் ஒரு பந்தை எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பது போல் வெளியேறினார்.

நம்பிக்கை நட்சத்திரம் குசல் மெண்டிஸ் களமிறங்கி பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விரும்பினார், ஆனால் தவறான ஷார்ட் தேர்வாக முடிந்தது. அதாவது அஸ்வினை ஸ்வீப் ஆடி ஆதிக்கம் செலுத்த அவர் முனைந்தார், ஆனால் அஸ்வின் லேசுபட்டவரா என்ன? தொடர்ந்து பந்தின் வேகத்தில், கோணத்தில், பிட்ச் செய்யும் இடத்தில் மாற்றங்களை நிகழ்த்தி குசல் மெண்டிஸை செட்டில் ஆக விடாமல் படுத்தினார் அஸ்வின். இவ்வாறு அஸ்வினிடம் 16 பந்துகள் சிக்கித் தவித்த குசல் மெண்டிஸ், மொகமது ஷமியின் ஒரு அரிதான ஷார்ட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தை பேசாமல் ஆடுவதை விடுத்து ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து ஆட முயன்றார், ஷமி பார்த்து விட்டார், வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு செல்ல பிளிக் ஆட முயன்றார் மெண்டிஸ் பந்து கால்காப்பைத் தாக்க உடனேயே ராட் டக்கர் கையை உயர்த்தினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே இந்தப் பந்து சென்றிருக்கும் என்று ஹாக் ஐ காட்டினாலும் கடைசியில் நடுவர் தீர்ப்பே வென்றது, இதனால் மெண்டிஸ் ரிவியூ செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய இலங்கை வீரரில் கேப்டன் சந்திமால் தனியாகத் தெரிந்தார், இந்த இன்னிங்ஸிலும் அவர் உமேஷ் யாதவ்வை இரண்டு அபார பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அஸ்வின் பவுலிங் இவருக்குப் புரியவில்லை, ஸ்வீப் ஷாட்டை தவிர உலகில் வேறு ஷாட்களே இல்லை என்பதுபோல் ஆடினார், ஒரே ஓவரில் இருமுறை வலுவான எல்.பி. முறையீடு எழுந்தது. சந்திமாலும் மேத்யூஸும் மேலும் சேதமின்றி உணவு இடைவேளை வரை 82/4 என்று ஸ்கோரை வைத்தனர். இருவரும் இணைந்து 27 ஓவர்களில் 65 ரன்களைச் சேர்த்தனர். அஸ்வினை ஸ்வீப் ஆடுவதை விடுத்து இறங்கி வந்து ஆட முயன்றார் சந்திமால் ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. இருமுறை மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது.

கடைசியில் 89 பந்துகள் போராடி 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த சந்திமால் குல்தீப் யாதவ்வின் திரும்பி எழும்பிய பந்தை ஷார்ட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்த மேத்யூஸ், அஸ்வினின் ஃபுல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆனார்.

உடனேயே திலுருவன் பெரேரா, அஸ்வின் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

7 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இன்னிங்ஸை விரைவில் முடிக்க கோலி வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்தார். ஷமி பந்தில் சண்டகன்வெளியேறினார், டிக்வெல்லா 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் என்று நன்றாக ஆடிய நிலையில் அஜிங்கிய ரஹானேயின் அருமையான கேட்சுக்குஉமேஷ் யாதவ்விடம் அவுட் ஆகி வெளியேறினார். குமாராவை அஸ்வின் வீழ்த்தி இந்தத் தொடரில் தன் விக்கெட் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவணும் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x