Published : 29 Jul 2017 12:31 PM
Last Updated : 29 Jul 2017 12:31 PM

ஸ்டோக்ஸ் அதிரடி சதம்; அறிமுக பவுலர் ரோலண்ட் ஜோன்ஸ் அசத்தல்: தோல்வி அச்சுறுத்தலில் தென் ஆப்பிரிக்கா

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி பின்பு தென் ஆப்பிரிக்கா அணியை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் என்று தோல்வி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் டோபி ரோலண்ட்-ஜோன்ஸ் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா பேட்டிங் முதுகெலும்பை காலி செய்தார்.

ரோலாண்ட்-ஜோன்ஸ் தான் வீசிய 10-வது பந்தில் டீன் எல்கரை வீழ்த்திய போது தென் ஆப்பிரிக்கா 47/4 என்று சரிந்தது. பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி (112) சதமெடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 112 ரன்களில் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசினார்.

தற்போது 126/8 என்ற நிலையில் 227 ரன்கள் பின் தங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணியில் தெம்பா பவுமா 34 ரன்களுடனும், மோர்கெல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வெர்னன் பிலாந்தரின் வயிற்று வலி என்ன நிலையில் உள்ளது என்று தெரியாததால் தென் ஆப்பிரிக்க அணிக்கு பவுலிங்கோடு, பேட்டிங்கிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பவுலர்களுக்குச் சாதகமான சூழ்நிலையில் இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் 82 ரன்களை அபாரமான தடுப்பாட்ட உத்தியுடன் எடுத்து சுவர் போல் நின்றார். பென் ஸ்டோக்ஸ் கேசவ் மஹாராஜை 3 சிக்சர்களை அடித்தார், இதில் 2-வது சிக்ஸர் அவரது டெஸ்ட் 5-வது சதமாக அமைந்தது. ஆனால் 91 ரன்களில் டுபிளெசிஸ் இவருக்கு கேட்ச் எடுத்த போது எல்லைக்கொட்டை தொட்டுவிட்டார். இதில் தப்பினார் ஸ்டோக்ஸ்.

முன்னதாக இங்கிலாந்து 171/4 என்று தொடங்கி ஸ்டோக்ஸின் 112 ரன்களுடனும், குக் 82 ரன்களுடனும் 353 ரன்களை எட்டியது, குக், மோர்கெல் பந்தில் எல்.பிஆனது மூலம் 10வது முறையாக மோர்கெலிடம் ஆட்டமிழந்தார், குக்கை வேறு எந்த பவுலரும் இந்த அளவுக்கு வீழ்த்தியதில்லை. ஸ்டோக்ஸுக்கு கிறிஸ்மோரிஸின் பந்து வீச்சு பிடித்துப் போய்விட்டது, அவரை விளாசித்தள்ளினார். ஜானி பேர்ஸ்டோவும் இவரை வெளுத்துக் கட்டினார். பேர்ஸ்டோ 36 ரன்களில் ரபாடா பந்தை எட்ஜ் செய்து வீழ்ந்தார். மொயின் அலி 16 ரன்கள் எடுக்க, அறிமுக வீரர் ரோலண்ட் ஜோன்ஸ் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்க அணியில் மோர்கெல், ரபாடா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ரோலண்ட்-ஜோன்ஸின் அபாரப் பந்து வீச்சு:

353 ரன்களை எடுத்த இங்கிலாந்து பிறகு தென் ஆப்பிரிக்க அணியை ரோலண்ட் ஜோன்சை வைத்து மிரட்டியது.

ஹெய்னோ கூன் (15) ரன்களில் ரோலண்டிடம் எல்.பி.ஆக, ஆம்லா (6) எழும்பிய பந்தை எட்ஜ் செய்து காலியானார். குவிண்டன் டி காக் 17 ரன்களில் ரோலண்ட் பந்தை லெக் திசையில் அடிக்க முனைந்தார் ஆனால் லேட் ஸ்விங்கில் முன்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. டுபிளெசிஸ் 1 ரன்னில் ஆண்டர்சனிடம் எல்.பி. ஆனார். கிறிஸ் மோரிஸ் 2 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரபாடா 30 ரன்களில் பிராடின் அருமையான பந்தில் பவுல்டு ஆக, மஹராஜ் எட்ஜ் செய்து ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 126/8.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x