Published : 29 Jul 2017 11:12 AM
Last Updated : 29 Jul 2017 11:12 AM

விராட் கோலி சதம்; இந்தியா 240/3 டிக்ளேர்: இலங்கைக்கு 550 ரன்கள் இலக்கு

கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

இன்று ஆட்டம் 15 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கியது, இந்திய அணி மேலும் 51 ரன்களை விரைவு கதியில் குவித்தது, 76 ரன்களில் தொடங்கிய விராட் கோலி தனது 17-வது டெஸ்ட் சதத்தையும், கேப்டனாக 10-வது சதத்தையும் எடுத்தார்.

136 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 103 ரன்களுடன் கோலி நாட் அவுட்டாக இருக்க ரஹானே 18 பந்துகளில் 23 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 240 ரன்களை எட்டியது, விராட் கோலி டிக்ளேர் செய்தார்.

இதனையடுத்து 550 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த உபுல் தரங்கா, மொகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் ரக உள்ளே ஸ்விங் ஆன பந்தை தடுத்தாட நினைத்தார் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார். இந்தப் பந்தை அவர் புல் ஷாட் ஆடியிருக்க வேண்டும், ஆனால் கூடுதல் உயரம் வந்த பந்தை பின்னால் சென்று தடுத்தாட நினைத்தது தவறாகிப் போனது.

குணதிலக 2 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் வீசிய இன்ஸ்விங்கரை நேராக ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் புஜார கையில் அடித்தார், இது கேட்சிங் பிராக்டீஸ் போல் இருந்தது.

தற்போது கருணரத்னே 19 ரன்களுடனும் மெண்டிஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x