Published : 26 Jul 2017 06:30 PM
Last Updated : 26 Jul 2017 06:30 PM

ஷிகர் தவண் அதிரடி 190 ரன்கள்; புஜாரா சதம்: ஒரே நாளில் 399 ரன்களைக் குவித்தது இந்தியா

கால்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

ஆட்ட முடிவில் புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஒரே நாளில் 399 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் இந்திய அணி எடுக்கும் 3-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். இவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது ஆச்சரியமல்ல.

அபினவ் முகுந்த் சவுகரியாகவும் ஆடவில்லை. 12 ரன்களில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார் கெட்டார். நுவான் பிரதீப் இவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

முகுந்த் போன்ற ஒருவரை அணியில் வைத்திருப்பது அணி நிர்வாகத்தின் அணித் தேர்வு சவுகரியத்துக்காகவேயன்றி வேறு எதற்குமாகவும் இருக்க முடியாது என்று தெரிகிறது, அவரது பேட்டிங் சர்வதேசத் தரத்துக்கு உயர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இவரை வைத்துக் கொண்டால் ராகுலோ, விஜய்யோ வரும் போது மீண்டும் அணிக்குள் நுழைப்பது சுலபம், அதே வேளையில் முகுந்துக்கு வாய்ப்பளித்தோம் என்று கூறிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது, எனவே இந்த ஸ்டாப் கேப்பிற்காக ஸ்ரேயஸ் ஐயர் போன்ற திறமையைக் கொண்டு வந்தால் அது பெரிய தர்மசங்கடங்களை விளைவிக்கலாம் என்று நிர்வாகம் யோசித்தால் அதில் தவறில்லை.

கேட்ச் தவற விட்டதற்காக இலங்கைப் பந்து வீச்சை தண்டித்த ஷிகர் தவண்:

ஷிகர் தவண் சில அருமையான ஷாட்களுடன் அனாயசமாக ஆடினார், ஆனால் அவர் 31 ரன்களில் இருந்த போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா பந்தை எட்ஜ் செய்ய, ஸ்லிப்பில் கேட்சைத் தவறவிட்ட குணரத்னே அதில் காயமடைந்து வெளியேறினார், அவர் இந்தத் தொடரில் இனி ஆட முடியாத அளவுக்குக் காயம் ஏற்பட்டது, இது இரட்டை அடியாகப் போனது. ஒரு புறம் ஒருநல்ல வீரரை காயத்தில் இழந்ததோடு, தவணின் கோபத்துக்கும் ஆளாகியது இலங்கைப் பந்து வீச்சு.

நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடும் தவண், உதவிகரமான பிட்சில் நீண்ட நாள் என்ற அடையாளம் இல்லாமல், தன் இடத்தைத் தக்க வைக்கும் நோக்கமும் இல்லாமல் வெளுத்துக் கட்டினார். அவர் ஆடிய ஷாட்களின் ரேஞ்ச் அவர் ஆடிய ஆட்டத்தின் ரிஸ்க்கை வெளிப்படுத்துவதாகும். உணவு இடைவேளையின் போது 64-ல் இருந்த தவண் அதன் பிறகு தேநீர் இடைவேளைக்குள் 126 ரன்களை அதிகபட்சமாக விளாசித் தள்ளி 190 ரன்களை 168 பந்துகளில் அடித்து நொறுக்கினார். மிடில் ஓவர்களில் அதிக ஸ்கோரை எடுத்த 2-வது இந்திய வீரராகத் திகழ்கிறார் ஷிகர் தவண், முதலிடத்தில் சேவாக் அல்லாமல் வேறு யார் இருக்க முடியும், இதே இலங்கை அணிக்கு எதிராக மும்பை பிரபர்ன் மைதானத்தில் அவர் 293 ரன்களை அடித்த போது உணவு இடைவேளைக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடையே 133 ரன்களை விளாசியது இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தருணம்.

ஆனால் உலக கிரிக்கெட்டில் 1954-ம் ஆண்டு டிரெண்ட் பிரிட்ஜில் டெனிஸ் காம்ப்டன் 173 ரன்களை இதே மிடில் செஷனில் அடித்து முதலிடம் வகிக்கிறார். இத்தனைக்கும் அப்போதெல்லாம் நாளொன்றுக்கு 90ஓவர்கள் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் இல்லை. இந்தியாவில் பாலி உம்ரீகர் இதேமிடில் செஷனில் 110 ரன்களை 1961-62 தொடரில் மே.இ.தீவுகளில் சாதித்தார்.

அன்று சேவாக் சிறந்த இலங்கை/உலக பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை விளாசியது போல் இன்று சிறந்த இலங்கை பவுலரான ரங்கனா ஹெராத்தை தவண் 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார்.

ஷிகர் தவண் ஆடிய ஷாட்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மென்மையான ஸ்வீப்ஷாட்கள், கடுமையான ஸ்வீப் ஷாட்கள், விக்கெட் கீப்பர் பின்னால் ஆடிய பெடல் ஷாட்கள், கட்டுக்கோப்புடன் கூடிய புல்ஷாட்கள். ஆஃப் திசையில் ஆடிய அதி அற்புதமான டிரைவ்கள், நேர் டிரைவ்கள், குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு அவர் கிரீசில் நிற்கவில்லை, அப்படி க்ரீசில் நின்றால் அது ஒன்று ஸ்வீப் ஷாட்டாக இருக்கும் இல்லையேல் பின்னால் சென்று ஆடிய லேட் கட்டிற்காக இருக்கும். எனவே மீண்டும் வந்த ஷிகர் தவண் 110 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்ட 147 பந்துகளில் 150 ரன்களையும் கடைசியில் 168 பந்துகளில் 190 ரன்களையும் விளாசினார். இதில் 31 அருமையான பவுண்டரிகள் அடங்கும் கடைசியில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பை மேலேறி வந்து ஒரு வெளுவெளுக்கும் முயற்சியில் மிட் ஆஃபில் மேத்யூசிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இரட்டைச் சதம் அடிக்காவிட்டாலும் தவண் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எடுத்த பிறகே வெளியேறினார்.

மறுமுனையில் புஜாரா 80 பந்துகளில் அரைசதமும் 173 பந்துகளில் சதமும் எடுத்து கடைசியில் 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் களத்தில் இருக்கிறார்

தவணும், புஜாராவும் இணைந்து 153 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், பிறகு ரஹானே, புஜாரா ஜோடி 113 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

விராட் கோலியின் ஷார்ட் பிட்ச் பிரச்சினை:

விராட் கோலிக்கு திடீரென ஷார்ட் பிட்ச் பந்துகள் பிரச்சினை தரத் தொடங்கியுள்ளன. இன்று 6 ரன்களை அவர் எடுத்திருந்த போது நுவான் பிரதீப் நெஞ்சுயர பவுன்சரை வீசினார், ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்த கோலி மிடில் ஸ்டம்ப் பவுன்சரை புல் ஆட முயன்றார், ஆனால் ஆடும் போது கண்களை மூடிக்கொண்டதால் பந்தின் உயரத்தைக் கணிக்க முடியவில்லை. எட்ஜ் ஆனது, கள நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் இலங்கை மேல்முறையீடு செய்ய அவுட் என்று தெரிந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரிந்த கோலியின் பார்ம் இன்னமும் சீரடையவில்லை என்றே தெரிகிறது.

இலங்கை அணியில் நுவான் பிரதீப் மட்டுமே கடினமாக உழைத்து வீசினார். அவர் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், குமாரா பந்தில்தான் தவணுக்கு கேட்ச் விடப்பட்டது, அந்த துரதிர்ஷ்டசாலி 16 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டார். ஹெராத் 92 ரன்களையும் பெரேரா 103 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இலங்கை அணி பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியை 500 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினால் அதுவே அந்த அணிக்கு பெரிய விஷயமாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x