Published : 25 Jul 2017 08:36 PM
Last Updated : 25 Jul 2017 08:36 PM

ஹெராத் சவாலை இந்திய அணியும் அஸ்வின் சவாலை இலங்கை அணியும் சமாளிக்குமா? புதனன்று முதல் டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கால்லே மைதானத்தில் புதனன்று களமிறங்குகிறது.

சமீபத்திய நிலைகுலைவுகளால் இந்தியாவுக்கு எதிராக மோசமானதை நினைத்து அச்சத்துடனேயே இலங்கை களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாழ்க்கையில் முதல் முறையாக வங்கதேசத்துடன் தோற்றது, சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்ததோடு, ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை திருப்திகரமான முறையில் வெற்றி பெறவில்லை, காரணம் இலங்கைப் பந்து வீச்சை ஜிம்பாப்வே அணியினர் மிகத்திறமையாக எதிர்கொண்டனர்.

இந்நிலையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியை இலங்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2015-ம் ஆண்டு தொடரில் கால்லே டெஸ்ட் போட்டியில் ஹெராத்திடம் வீழ்ந்து தோல்வி தழுவிய பிறகு இந்திய அணி ரங்கனா ஹெராத் வீசினால் இறங்கி வந்து வெளுக்கும் அணுகுமுறையைக் கையாண்டு, அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சில் இலங்கையில் தொடரையே வென்றது, அந்த அணி அப்போது நல்ல நிலையில் இருந்தது, சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் தொடராக இருந்தாலும் அவரை அஸ்வின் படாதபாடு படுத்தி எடுத்து வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இலங்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆஸ்திரேலியா இலங்கை அணியிடம் 3-0 என்று உதை வாங்கும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்தது.

அதே போல் ரங்கனா ஹெராத் 40 வயதிலும் அபாரமாக தன் சொந்த மண்ணில் வீசி வருகிறார், நாம் அவரை கடந்த முறை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்டது போல் இம்முறை இந்திய வீரர்களை வீழ்த்த அவரும் கூட புதிய உத்திகளை வகுத்திருக்கலாம், எனவே ஒரே மாதிரியான அணுகுமுறையை இந்திய அணியினர் விடுத்து எதிர்பாராத ஒரு அணுகுமுறையை சமயோசிதமாகப் பயன்படுத்துவது நல்லது என்று தெரிகிறது.

கே.எல்.ராகுல் தன் உடல் தகுதியை சரிவரக் கவனிக்கவில்லையெனில் விரைவில் அவர் இந்திய உடையிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படும், அவர் முதல் டெஸ்டில் ஆட முடியாததால் மீண்டும் புஜாராவையே இந்திய அணி நம்பவேண்டியுள்ளது.

பவுலிங்கில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களை தயங்காமல் பயன்படுத்த வேண்டுமென்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளது எடுத்துக்கொள்ளத்தக்க அறிவுரையே.

ஆனால் இலங்கை அணி முதல் நாளில் கொஞ்சம் வேகப்பந்து வீச்ச்சுக்குச் சாதகமான பிட்சை போட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

இலங்கை பேட்டிங்கில் உபுல் தரங்கா மீண்டும் வந்திருப்பது ஒரு அனுபவ வீரர் என்ற முறையில் அந்த அணிக்கு வலுசேர்க்கும், ஆனால் அவருக்கு அஸ்வின் அச்சுறுத்தல் எப்போதும் உள்ளது. குசல் மெண்டிஸ், குணதிலக, மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்திய பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மாவா அல்லது ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவா என்ற கேள்வி உள்ளது, ஆனால் கடந்த முறை ரோஹித் சர்மா ஹெராத் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதால் ரோஹித் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பிட்சைப் பொறுத்தவரையில் முதல் 2 நாட்கள் பேட்டிங் பிட்சாக இருக்கலாமென்று கணிக்கப்படுகிறது.

அஸ்வினுக்கு 50வது டெஸ்ட் போட்டி, சந்திமால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நிமோனியா காரணமாக விலகியுள்ளதால் ஹெராத் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளாக டிரா ஆன டெஸ்ட் போட்டியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி (உத்தேசம்): அபினவ் முகுந்த், ஷிகர் தவண், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோஹித்/பாண்டியா, சஹா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார்/ஷமி.

இலங்கை அணி: உபுல் தரங்கா, கருணரத்னே, குசல் மெண்டிஸ், குணதிலக, மேத்யூஸ், டிக்வெல்லா, அசேலா குணரத்னே, திலுருவன் பெரேரா, ஹெராத், லாஹிரு குமாரா, நுவான் பிரதீப்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x