Published : 26 Sep 2016 01:23 PM
Last Updated : 26 Sep 2016 01:23 PM

500-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 500-வது டெஸ்ட் என்ற வகையில், இந்தப் போட்டி சிறப்பிடம் பெறுவது கவனிக்கத்தக்கது.

இப்போட்டியில் 434 ரன்கள் இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவிலேயே 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாளான இன்று தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்துக்கு ரான்க்கி, சாண்ட்னர் இணை சிறிது நம்பிக்கை அளித்தது.

இந்திய பந்துவீச்சை இருவரும் சமாளித்து ஆடியதோடு மட்டுமல்லாமல் சீரான ரன் சேர்ப்பிலும் ஈடுபட்டனர். ரான்க்கி 83 பந்துகளில் அரை சதம் எட்டினார்.மேற்கொண்டு விக்கெட் இழக்காத நியூஸிலாந்து அணி 158 ரன்களை எட்டியது.

ரான்க்கி 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தை தூக்கியடிக்க முற்பட்டவர் அஸ்வினிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து ஆட வந்த வாட்லிங் வேகமாக ரன் சேர்க்க முற்பட்டு சில பவுண்டரிகளை அடித்தாலும், 18 ரன்களுக்கு ஷமியின் வேகத்தில் வீழ்ந்தார். மறுமுனையில் சாண்ட்னர் அரை சதத்தை தொட்டிருந்தார்.

ஷமியின் அடுத்த ஓவரில் அடுத்து ஆடவந்த க்ரெய்க் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, உணவு இடைவேளைக்கு முன்பே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 204 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் உணவு இடைவேளைக் கடந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா, அஸ்வின் ஜோடியின் சுழல், நியூஸிலாந்தை சோதிக்க முதலில் சாண்டனர் 71 ரன்களுக்கு அஸ்வினிடம் வீழ்ந்தார். அடுத்த சில ஓவர்களில் சோதியை (17 ரன்கள்) அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்தார். 9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்ட நிலையில் அடுத்த 3 ஓவர்கள் ரன் சேர்ப்பின்றி மெய்டன் ஓவர்களாக மாற, கடைசி வீரர் வாக்னரை அஸ்வின் லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

முடிவில் நியூஸிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

200 விக்கெட்டுகளை எட்டிய அஸ்வின்

500-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்தியாவின் 130-வது டெஸ்ட் வெற்றி இது. இந்திய மண்ணில் 88-வது வெற்றியாகும். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் 200 விக்கெட்டுகளை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை எடுத்ததுன் மூலம் 5-வது முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், தான் ஆடிய 37 போட்டிகளில் 19 முறை 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x