Published : 27 Apr 2016 03:07 PM
Last Updated : 27 Apr 2016 03:07 PM

4 புள்ளிகள் பெற்றுள்ள அணியுடன் இணைய வேண்டாமா? - வெற்றி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது 6-வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய புனே அணி 2-வது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

தற்போது 4 புள்ளிகளில் புனே அணியும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளன. இந்த அணிகளுக்குக் கீழே கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1 வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாகத் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை, முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 118/8 என்றி கட்டுப்பட்டது. தவண் மட்டுமே அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். புனே அணியில் அசோக் டிண்டா 3 விக்கெட்டுகளை 23 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய புனே அணி 11 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது, ஆனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே அணி இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியைக் காட்டிலும் 34 ரன்கள் அதிகம் எடுத்திருந்ததால் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களையும் டு பிளெசிஸ் 30 ரன்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து தோனி கூறும்போது, “எங்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. சில அணிகள் 4 புள்ளிகளுடன் உள்ளன, எனவே நாங்கள் அவர்களுடன் முதலில் இணைய வேண்டும். பிட்ச் 40 ஒவர்களும் நல்லபடியாக இருந்ததால் நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்பினோம்.

நிலைமைகளை பவுலர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்தை இறக்கினர். அஸ்வினும் அவர் இயல்பாக எப்படி வீசுவாரோ அப்படி வீச முடிந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லையெனில் பேட்ஸ்மென்கள் எந்த ஒவரையும் அடித்து நொறுக்கும் உரிமம் பெற்று விடுவர். இந்த விஷயத்தில் இந்தப் போட்டி நன்றாக அமைந்தது.

பீல்டிங்கில் நாங்கள் சிறந்து விளங்கவில்லை. எங்களுக்கு அதிர்ட்ஷ்டமும் தேவை. எங்கள் அணியில் சராசரி முதல் மந்தமான பீல்டர்கள் சிலர் உள்ளனர். ஆகவே நாங்கள் கூடுதலாக 10-15 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் பந்துகள் நல்ல பீல்டர்கள் கையில் சென்றன” என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x