Published : 23 Apr 2016 03:17 PM
Last Updated : 23 Apr 2016 03:17 PM

3 விக்கெட்டுகளை தேவையில்லாமல் இழந்தோம்: தோனி

புனேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இதனையடுத்து தோனி கூறும்போது, இலக்கைத் துரத்தும் போது தேவையில்லாமல் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார்.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பெங்களூரு அணி விராட் கோலி (80; 63 பந்துகள் 7 பவுண்டரி 2 சிக்சர்), ஏ.பி. டிவில்லியர்ஸ் (83, 46 பந்துகள் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆகியோரது 155 ரன்கள் கூட்டணியினால் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ரைசிங் புனே அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதில் விராட் கோலி மிடில் ஓவர்களில் சரியாக ஆடவில்லை, திணறினார். டிவில்லியர்ஸ் தன் இஷ்டப்பட்ட ஸ்ட்ரோக்குகளை ஆடினார், கட்டுப்படுத்த முடியவில்லை.

புனே அணியில் இசாந்த் சர்மா படுமோசமாக வீசினார், அஸ்வின் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்க முடியவில்லை, முருகன் அஸ்வின் 2 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை. பெரேரா மட்டுமே 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை கடைசி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார்.

பெங்களூரு அணியில் கேன் ரிச்சர்ட்ஸன் 3 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஃபா டு பிளேசிஸ், ஸ்மித் விக்கெட்டும், கெவின் பீட்டர்சன் ரன் எடுக்கும் முன்னரே காயம் ஏற்பட்டு வெளியேறியதும் புனே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்மித் ரன் அவுட் துரதிர்ஷ்டவசமானது. அஜிங்கிய ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். தோனியின் 38 பந்து 41 ரன்கள் சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை.

கடைசியில் 109/3 என்ற நிலையில் ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்படும் போது பெரேரா இறங்கி மட்டையைச் சுழற்றினார். தப்ரைஸ் ஷாம்சியை மிட் விக்கெட்டில் ஒரு சிக்சரும், 18-வது ஓவரில் ஹர்ஷல் படேலை 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 25 ரன்களை விளாச 18 பந்துகளில் 50 ரன்கள் என்ற சமன்பாடு, 12 பந்துகளில் 25 என்று வெற்றி வாய்ப்பையும் உருவாக்கியது. ஆனால் வாட்சன், கேன் ரிச்சர்ட்ஸன் புனே வெற்றியை அனுமதிக்கவில்லை. பெரேரா 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து வாட்சனிடம் வீழ்ந்தார். அஸ்வினும் இதே ஓவரில் அவுட் ஆக 19-வது ஓவரில் 4 ரன்களே எடுக்க முடிந்தது. 20-வது ஓவரில் பாட்டியா, முருகன் அஸ்வினை கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

இந்தத் தோல்வி குறித்து தோனி கூறியதாவது:

3 விக்கெட்டுகளை தேவையில்லாமல் இழந்தோம். ஃபாஃப் அவுட் ஆனார், பீட்டர்சன் காயமடைந்தார், ஸ்மித் ரன் அவுட் ஆனார். 185 ரன்கள் என்பது சற்றே கூடுதலான இலக்குதான். 3 பேட்ஸ்மென்கள் பெவிலியன் திரும்ப பின்னடைவு ஏற்பட்டு, இலக்கு கடினமானது. ஆனால் நெருக்கமாக வந்த விதம் குறித்து மகிழ்ச்சி. பீட்டர்சன் காயமடைந்தது ஒரு மறைமுக நன்மை. நாங்கள் 6 பவுலர்களுடன் ஆடுகிறோம். ஆனாலும் இறுதி ஓவர்கள் சரியாக அமைவதில்லை. ஆல்பி மார்கெல் அல்லது மிட்ச் மார்ஷ் ஆகியோரில் ஒருவரை அடுத்த போட்டிகளுக்கு அழைக்கலாம்.

எங்களிடம் உள்ள வீரர்களைப் பார்க்கும் போது ஒருவரையும் அணியிலிருந்து நீக்குவது என்பது முடியாது. எங்களது பந்து வீச்சை கொஞ்சம் பலப்படுத்த வேண்டியுள்ளது. அதிக நெருக்கடி இல்லாமலும் இன்னும் சில போட்டிகள் விளையாடி அனுபவம் பெற்ற பிறகும் முருகன் அஸ்வின் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அணியில் சில மந்தமான பீல்டர்கள் உள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இவர்கள் கேட்ச்களை பாதுகாப்பாகப் பிடித்து விட்டால் அதற்கு மேல் நான் ஒன்றும் அவர்களிடம் கேட்கப்போவதில்லை.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x